யாழ். பல்கலை பகிடிவதை; 4 மாணவர்களுக்கு கற்றல் தடை | தினகரன்

யாழ். பல்கலை பகிடிவதை; 4 மாணவர்களுக்கு கற்றல் தடை

இருவர் விடுதியிலிருந்து வெளியேற்றம்; உபவேந்தர் கடும் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டு ள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பகிடிவதை தொடர்பில் 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த 4 மாணவர்கள் பல்கலைக்கழத்தில் கல்வி கற்பதற்கும், அவர்களுக்கான ஏனைய சலுகைகள் உயர் பட்டப்படிப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார்.

இணையவழியில் மாணவர்கள் பாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவ சிரேஷ்ட ஆலோசகர்கள், பேரவை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள் பலர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

அண்மையில் நடைபெற்ற பகிடிவதை தொடர்பில் உத்தியோகப்பற்ற முறையில் வெளியாகிய தகவலின் அடிப்படையில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் 10 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைகளின்படி முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இப்பகிடிவதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவரும் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இனங்காணப்பட்ட மாணவர்கள் இவ்விபரங்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று அறிவித்தது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பகிடிவதை தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாணவர்கள் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவித்தார்.

இவ்வாறு பகிடிவதை செய்தவர்கள் ‘உன்னுடைய அக்கா இராணுவத்தில் இருக்கின்றா தானே?” எனக் கேட்டு, இம்சைப்படுத்தியுள்ளனர். இங்கு அரசியல் பழிவாங்கல்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை மாணவர்களின் இம்சைப்படுத்தல்கள் சுய வெளிப்பாடுகள் அல்ல. இது அரசியல் பழிவாங்கல்களாக உள்ளன.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள், முகாமைத்துவ பீட பீடாதிபதி மற்றும் மாணவ ஆலோசகர்கள், சம்பவம் தொடர்பாக அறிக்கை தர வேண்டும். அவர்களுக்கு 07 நாட்கள் வழங்கப்படும், அந்த 07 நாட்களில் பதில் தர வேண்டும்.07 நாட்களில் பதில் தராவிடின், பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன், 04 ஆம் வருட வகுப்புக்கள் தடை விதிக்கப்படும், கௌரவப்பட்டங்கள் வழங்கப்படமாட்டாது, அத்துடன், ஆகக்குறைந்த ஒழுக்காற்று அபராதம் விதிக்கப்படும். சைபர் குற்றத்தின் பிரகாரம், அந்த மாணவர் என்ன கேட்டனர் என்பதை பொறுத்து நடவடிக்கைகள் வலுப்பெறும்,

அத்துடன், சிரேஸ்ட மாணவர்களுக்கு உதவியதாக தெரிவிக்கப்படும், புதுமுக மாணவர்களும், பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சைபர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதன் பின்னர், பொலிஸார் அந்த மாணவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க பல்கலைக்கழக நிர்வாகம், உரிய ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குறூப், பருத்திதுறை விசேட நிருபர்கள்


Add new comment

Or log in with...