அபிவிருத்தி காண வேண்டிய மல்வத்தை வைத்தியசாலை | தினகரன்

அபிவிருத்தி காண வேண்டிய மல்வத்தை வைத்தியசாலை

அம்பாறை நகருக்கு கிழக்காக 9 மைல் தொலைவில் முக்கிய கேந்திர மையமாகத் திகழும் மல்வத்தை சந்தியில் இருந்து அப்பிரதேச மூவின மக்களுக்கான வைத்திய வசதியை வழங்கி வருகிறது ஒரு வைத்தியசாலை.

அதுதான் மல்வத்தை ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவு வைத்தியசாலை.

இத்தமிழ்க் கிராமம் கடந்த காலங்களில் அவ்வப்போது பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டது. மக்கள் இடம்பெயர நேரிட்டது. 1990களில் இறுதியாக இடம்பெயர்ந்து காரைதீவு, தம்பிலுவில் போன்ற பகுதிகளில் வாழ்ந்த வரலாறும் உள்ளது. 1994 பிற்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்றது. அத்தருணத்தில் வைத்தியசாலையின் அவசியம் உணரப்பட்டது.

1995களில் அமைச்சர் அஷ்ரப் காலத்தில் மத்திய மருந்தகமாக ஆரம்பமான இவ்வைத்தியசாலை 2001இல் அமைச்சர் தயாரத்னவின் காலத்தில் மத்திய மருந்தகத்துடன் மகப்பேற்றுமனையும் அமையப் பெற்று தரமுயர்த்தப்பட்டது.

இதற்கு உள்ளுர் மட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாகவிருந்த சோ.புஷ்பராசா, த.கலையரசன், சம்மாந்துறை உதவித் தவிசாளராகவிருந்த வெ.ஜெயச்சந்திரன், இறுதியாக முன்னாள் அமைச்சர் வி.முரளிதரன் (கருணா) போன்றோர் முயற்சியெடுத்ததை மறுக்க முடியாது. வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரும் அடிக்கடி சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு முயற்சியெடுத்தனர்.

இன்றைய புதிய கட்டமைப்பில் இவ்வைத்தியசாலை ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவு வைத்தியசாலையாக இயங்கி வருகிறது. இதனை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டுமெனப் பலரும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

அதன் பலனாக சுகாதார அமைச்சின் அண்மைய அறிவித்தலின்படி பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவிருக்கிறது.

அழகான சிவப்பு நிற பெயர்ப்பலகையுடன் கூடிய அவ்வளாகத்தினுள் நுழைந்ததும் அங்கு அம்புலன்ஸ் நிற்பது தெரிந்தது. அருகில் மகப்பேற்று மருத்துவமனை உள்ளது. உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள கட்டில்கள் வெறிச்சோடிக் கிடந்தன. யாருமில்லை. அதற்கான தாதிய உத்தியோகத்தர், ​ெடாக்டர் இல்லாமையே காரணமெனத் தெரியவந்தது.

இருக்கின்ற ​ெடாக்டர் காலை முதல் பிற்பகல் 4.30மணி வரை பூரண சேவையையாற்றி வருகிறார். அதுவே இப்பிரதேச ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாகும்.ஆனால் பிற்பகல் 5மணிக்குப் பிறகு வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய யாரும் இல்லை. அம்பியூலன்சில் அனுப்பவும் பரிந்துரைக்க யாரும் இல்லை. இக்குறைபாடு வைத்தியசாலை வெகுவிரைவில் தரமுயர்த்தப்பட்டதும் நீங்குமென எதிர்பார்க்கலாம்.

எனினும் முன்பிருந்ததை விட வைத்தியசாலை சூழல் துப்புரவாக சுகாதாரப் பேணலுடன் காட்சியளித்தது. வெளிநோயாளர் பிரிவுக்கு மக்கள் வந்து கொண்டிருந்தனர். இருக்கின்ற சிறுவளங்களைக் கொண்டு அங்கு சிறப்பான வைத்தியசேவை ஆற்றப்பட்டு வருவதை நேரடியாகக் காண முடிந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ​ெடாக்டர் குண.சுகுணனின் ஏற்பாட்டில் அண்மைக் காலமாக இங்கு இரத்தப் பரிசோதனைக்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இங்குவரும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

மிகவும் பின்தங்கிய அப்பிரதேச மூவின மக்களுக்கும் பொதுவாக மனிதாபிமான சேவையை வழங்கி வரும் இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டு கூடுதல் சேவையை ஆற்ற வேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாகும்.

வெளிநோயாளர் பிரிவுக்குச்சென்றதும் மக்கள் கூடுதலாக இருந்தனர். அங்கு சுகா தார ஊழியர் அவர்களது பெயர்களை அன்புடன் விசாரித்து பதிந்து கொண்டிருந்தார். வெளிநோயாளர் பிரிவு மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

அங்குள்ள ஒரேயொரு வைத்தியஅதிகாரியான ​ெடாக்டர் கௌரி நோயாளிகளை மிகவும் அன்பாக பொறுமையுடன் கவனித்துக் கொண்டிருந்தார். சிங்களப் பெண்மணியானாலும் தமிழில் நோயாளிகளுடன் அளவளாவி சிகிச்சையளிப்பதை நேரடியாகக் காண முடிந்தது.

அவர் கூறியதாவது, தற்போது மட்டு ப்படுத்தப்பட்ட ஆளணியினருடன் முடிந்தளவு சேவையாற்றி வருகிறோம். நான் அம்பாறையைச் சேர்ந்தவர். எனது பணியினை உச்சக்கட்டமாக செய்து வருகிறேன். பாஷை ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இப்போது பழகி விட்டேன். ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தமை ஒரு பாக்கியமாகும்.

தினமும் சுமார் 200முதல் 250 வரையிலான நோயாளிகள் இங்கு வருகின்றனர். கிளினிக் நாட்களில் அதிகம். இப்பிரதேச நிலை கருதி எமது சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் சேவை செய்கின்றனர். இரத்தப் பரிசோதனை வசதி இம்மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும்.

விரைவில் தரமுயர்த்தப்பட்டதும் மேலதிக ​ெடாக்டர், தாதிய உத்தியோகத்தர்கள் போன்ற ஆளணி கிடைக்கப்பெறும்.அப்போது தற்போதையைவிட மிகவும் திருப்தியான சேவையை வழங்கமுடியும் என்றார்.

 

வி.ரி.சகாதேவராஜா...?

(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...