அமைதி என்பது மனிதனின் அடிப்படைத் தேவை | தினகரன்

அமைதி என்பது மனிதனின் அடிப்படைத் தேவை

பிரேம் ராவத் அவர்கள் மலேசியாவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வ அமைதிப் படை அமைப்பின் முன்பு ஆற்றிய உரையிலிருந்து...

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையான ஒரு தேவை இருக்கின்றது. வாழ்வில் அமைதி இருக்க வேண்டும் என்பதே அந்தத் தேவையாகும். நாம் அடிப்படை விடயங்களை மறக்கும் போது எமது சமநிலையை இழக்கின்றோம். உங்களுக்கு ஒரு அருமையான கதையைக் கூறுகின்றேன்.

சக்தி வாய்ந்த மந்திரவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை, அவருடைய மனைவி எப்போதும் 'எங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்' என்று கூறுவார். ஒரு நாள் மந்திரவாதி சாலையில் போய்க் கொண்டு இருந்த போது ஒரு சுண்டெலியைக் கண்டார். அது காயப்பட்டுக் கிடந்தது. அதைக் கையில் எடுத்து தனது சக்தியால் ஒரு அழகான சிறு குழந்தையாக மாற்றினார். தனது மனைவியிடம் சென்று "நீ எப்போதும் ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்டாய், இதோ உனக்காக அழகான ஒரு பெண் குழந்தையைக் கொண்டு வந்திருக்கின்றேன்" என்று கூறி அவளிடம் கொடுத்தார். அவர்கள் அந்தக் குழந்தையிடம் மிகவும் அன்பு செலுத்தினார்கள். அவளுக்கு கல்வி புகட்டி நன்றாக வளர்த்து வந்தனர்.

அவள் வளர்ந்து வந்த போது மிகவும் அழகான பெண்ணாக மட்டுமல்ல, மிகவும் புத்திசாலியாகவும், நற்பண்பு கொண்டவளாகவும் இருந்தாள். ஒரு நாள் மந்திரவாதி அவளிடம் "நீ திருமணம் செய்து கொள்ளும் வயதை அடைந்து விட்டாய். நீ யாரை திருமணம் செய்ய விரும்புகின்றாய்"? என வினாவினார். அவள் யோசித்து விட்டு "அதற்கான சாத்தியங்கள் என்ன?" என்று கேட்டாள். மந்திரவாதியும் "நான் உனக்கு பொருத்தமானவர்களை அணுகி அவர்களின் விருப்பத்தையும் சம்மதத்தையும் பெற்ற பின் உனக்கு தெரிவிக்கின்றேன்" என்றான்.

மந்திரவாதியும் வலிமை மிக்க பிரம்மாண்டமான மலை ஒன்றிடம் சென்று அந்த மலையை நோக்கி 'நீங்கள் என் மகளை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா?' என்று கேட்டார். மலையும் "நான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் மிகவும் அழகானவள், புத்திசாலி, மிகவும் கனிவானவள், ஆகையால் நான் அவளை என் மனைவியாக்குவதற்கு விரும்புகிறேன்" என்றது.

அவர் மகளிடம் சென்று "மகளே, மலை உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றது. மலை சக்தி வாய்ந்தவர், வலிமையானவர். நீ அதை திருமணம் செய்ய விரும்புகின்றாயா?" என கேட்க மகள் மலையை திருமணம் செய்ய மறுத்து விட்டாள்.

பின்னர் கடலை அணுகி அதன் விருப்பத்தைக் கேட்டார். மகளுக்கு கடலின் சம்மதத்தை தெரிவித்த போது, "நான் கடலை திருமணம் செய்ய விரும்பவில்லை" என்றாள். மேலும் அரசர்கள், இளவரசர்கள், பேரரசர்கள் என பலரையும் அவள் நிராகரித்தாள்.

நீ எல்லா மணமகன்களையும் நிராகரித்து விட்டாய், "உனக்கு விருப்பமான யாராவது இருக்கிறார்களா" என வினாவினான் மந்திரவாதி. அத்தருணத்தில் ஒரு சுண்டெலி அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்தது. அவள் அதைப் பார்த்ததும் "நான் இதைத்தான் திருமணம் செய்ய விரும்புகின்றேன்" என்று கூறினாள்.

மந்திரவாதி முன்பு அவள் யாராக இருந்தாள் என்பதை நினைவு கூர்ந்தார். அவளை மனிதனாக மாற்றி எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தும் அவளது சுபாவம், இயல்பு மாறவில்லை. பல விடயங்கள் அவளின் வாழ்க்கையில் நடைபெற்ற பொழுதும் அவள் பழைய விடயங்களை மறக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான். மலை, கடல், அரசன், இளவரசன் மற்றும் பேரரசர்கள் எல்லாவற்றையும் விட ஒரு அழகான சுண்டெலிதான் அவளைக் கவர்ந்தது. ஏனென்றால் அது அவளுடைய இயல்பில் சுபாவத்தில் இருந்தது.

கதையின் அர்த்தம் என்னவென்றால், நாம் இந்த உலகில் வாழ்கிறோம், தொழில்நுட்பம் மாறி விட்டது, பல விஷயங்கள் மாறி விட்டன. ஆனால் நாம் இன்னும் மனிதர்கள்தான். இங்கே கேள்வி என்னவென்றால், 'ஒரு மனிதன் என்றால் என்ன?' உலகெங்கிலும் நான் மக்களிடம் இந்தக் கேள்வியை கேட்கும் போது, ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு மனிதன் என்று சரியான பதிலை சொல்வான் என நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அப்படியல்ல, யார் என்பதை மட்டுமல்ல உண்மையான தேவைகள் என்ன என்பதையும் மனிதர்கள் மறந்து விட்டார்கள்.

தேவை மற்றும் விருப்பம் என்பதற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எவை இல்லாமல் உங்களால் உயிர் வாழ முடியாதோ அதுவே உங்கள் 'தேவை'. உங்களுக்கு காற்று, உணவு மற்றும் தண்ணீர் என்பன அத்தியாவசியத் தேவைகளாகும். தொலைக்காட்சி பார்ப்பது உங்களது விருப்பம். காற்று இல்லையேல் நீங்கள் இறந்து விடுவீர்கள். ஆனால் தொலைக்காட்சியைப் பார்க்கவில்லை என்றால் நீங்கள் இறந்து விட மாட்டீர்கள். ஆனால் சமுதாயத்தில் நான் தொலைக்காட்சியைப் பார்க்கா விட்டால் இறந்து விடுவேன் என்று நினைக்கும் அளவுக்கு நாம் மனதளவில் மாறி விட்டோம். இந்த உலகம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதோ அவற்றிற்கே நாமும் மதிப்பும் முக்கியத்துவமும் அளிக்கின்றோம். ஆனால் நாம் உண்மையென விளங்கிக் கொள்ளும் விடயங்களிற்கு ஒருபோதும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

நான் இங்கு வந்து அமைதி பற்றி பேச வேண்டிய நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயம் என நினைக்கின்றேன். நான் அமைதி பற்றி இங்கு பேச வேண்டியதில்லை. ஏனெனில் ஏற்கனவே எல்லோருக்குமே அமைதி என்பது ஒரு தேவையென தெரிந்திருக்க வேண்டிய விடயமாகும். 'அமைதி என்பது ஒரு தேவை'. அமைதி இல்லாமல், உங்களுக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் பணம் இல்லாமல், நீங்கள் வளமாக வாழ முடியாது.

இந்த உலகில் நமக்கு இருக்கும் சவால் என்னவென்றால் நாம் நம்முள் உள்ள அடிப்படையான விடயங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும், அமைதியை வேறெங்கோ இருந்து கொண்டு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள். நான் அமைதியைத் தேடுகிறேன் என்று நீங்கள் கூறினால், நீங்கள் அதைக் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் என நான் பதிலளிப்பேன். ஏனெனில் அமைதி உங்களினுள்ளே ஏற்கனவே இருக்கின்றது. 'அமைதி உங்களில் இல்லை' என்ற அனுமானமே உங்களுள் தேடலைத் தூண்டுகிறது. உங்களினுள் அமைதி இருப்பதை அறியாததனால் உங்கள் அனுமானமே தவறாகி விடுகின்றது.

நல்லது, கெட்டது, சரி,பிழை எல்லாமே உங்களிடமே உள்ளது. இந்த உலகில் மிகவும் மோசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அமைதி எவ்வாறு சாத்தியம்? என பலரும் கேட்கின்றார்கள். உண்மைதான், இந்த உலகில் மோசமான விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மனிதனிலும் 'நல்ல' குணங்களும் உள்ளன. ஆனால் அவை நன்றாக வளர்க்கப்படவில்லை, பேணப்படவில்லை. பராமரிக்கப்படவில்லை. அதுவே மோசமான விடயங்கள் நடைபெறுவதற்கும், அமைதியின்மைக்கும் காரணமாக இருக்கலாம்.

உலகத்தின் நிலைமை இதுதான். ஆனால் உங்கள் நிலைமை என்ன? நாங்கள் மனிதர்கள். நாம் பணத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்களல்ல. நாங்கள் கருணை, தாராள மனப்பான்மை, அன்பு, உணர்வு, மற்றும் புரிந்து கொள்தல் என்பதைப் பற்றியவர்கள். நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, சக மனிதர்களுக்கும் மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினருக்கும், நீங்கள் விரும்பும் எவருக்கும் வழங்கக் கூடிய பரிசுகள் இவை. இவ்வாறான பரிசு பற்றிய அழகான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை பகிர்ந்து கொண்டால் அது மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. பணம் அப்படி அல்ல. கொடுக்கும் போது உங்களிடம் இருக்கும் பணம் குறையும். அதனால்தான் மக்கள் மற்றவர்களுக்கு பணத்தைக் கொடுக்காமல் தமக்காக சேமிக்க முயற்சிக்கிறார்கள்.

உங்களிடமிருந்தே அமைதி தொடங்குகிறது. அது மிகவும் எளிதானது, நீங்கள் யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 'உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்' என்று சாக்ரடீஸ் சொன்னதில் தவறேதுமில்லை.

 

மேலதிக விபரங்களுக்கு:

https://www.timelesstoday.tv/

https://www.tprf.org/peace-education-program/

https://www.premrawat.com/engage/peak-know-yourself

https://www.youtube.com/c/PremRawatOfficial/featured

Or WhatsApp +94777793140

தொகுப்பு:

இ.மனோகரன்...?


Add new comment

Or log in with...