இரவு நேர மின்னொளி கிரிக்கட் விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி இல்லை | தினகரன்

இரவு நேர மின்னொளி கிரிக்கட் விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி இல்லை

 - தவிசாளர் அமானுல்லா

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள் இரவு நேர மின்னொளி கிரிக்கட்சுற்றுப்போட்டிகளுக்கு அனுமதி கேட்கின்ற நிலையில், குறித்த விடயத்தை தான் அனுமதிக்கப்போவதில்லை என பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துதெரிவிக்கையில், கொரோனா வைரசின் தாக்கத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாகபாதிக்கப்பட்டது. இதனை மீளக் கட்டியெழுப்ப அதிபர்கள், ஆசிரியர்கள் கடுமையான உழைப்புச் செய்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளது. எனவே இப்படியான ஒரு காலப்பகுதியில் இரவு நேரமின்னொளிப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்குஇடைஞ்சலான ஒரு தவிசாளராக நான் இருக்க விரும்பவில்லை .

மேலும் பாடசாலைகளின் அதிபர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என எல்லோரும் இந்தவிடயம் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் என தவிசாளராகிய என்னிடம்முறையிடுகின்றனர்.

எனவே விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், வீரர்கள் மாணவர்களின் சீரான கல்விச் செயற்பாடுகளுக்கு ஆதரவு நல்குதல் அவசியம். அதுவல்லாமல் தவிசாளரை பிழையாக விமர்சிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல் அவசியம்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் விளையாட்டுகளுக்கு எதிரானவரல்ல ஆனால், அதனால்கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைதல் கூடாது என்பதிலே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு கவனம் செலுத்துதல் அவசியம் என்றார்.

நமது மாணவச் செல்வங்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கி இக்கட்டான கால சூழலுக்குள் அகப்பட்டமாணவர்களை ஊக்கப்படுத்தி வெற்றிபெறச் செய்வேதே நமது இலக்காக அமைதல் அவசியம் என பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா குறிப்பிட்டார்.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...