மெக்ஸ்வெல், அலெக்ஸ் கெரி இணைப்பாட்டத்தால் ஆஸி வெற்றி | தினகரன்

மெக்ஸ்வெல், அலெக்ஸ் கெரி இணைப்பாட்டத்தால் ஆஸி வெற்றி

அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

இந்த ஒருநாள் தொடரின் முன்னைய இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பெற்று, தொடர் 1-1 என சமநிலையான நிலையில் மூன்றாவது போட்டி புதன்கிழமை (16) மன்செஸ்டர் நகரில் தொடங்கியது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காகப் பெற்றார். இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக, ஜொன்னி பெயார்ஸ்டோவ் தன்னுடைய 10ஆவது ஒருநாள் சதத்துடன் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பெளண்டரிகள் அடங்கலாக 126 பந்துகளுக்கு 112 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம், அரைச்சதங்களை பூர்த்தி செய்த துடுப்பாட்டவீரர்களில் சேம் பில்லிங்ஸ் 58 ஓட்டங்களையும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் எடுத்தனர்.

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் அடம் ஷம்பா மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்ட 303 ஓட்டங்களை அடைய அவுஸ்திரேலிய அணி தமது பதில் துடுப்பாட்டத்தினை தொடங்கியது.

எனினும், அவுஸ்திரேலிய வெற்றி இலக்கிற்கான தமது பயணத்தில் ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றம் ஒன்றை காண்பித்தது. அந்தவகையில், தமது முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் அனைவரினையும் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது.

இத்தருணத்தில் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் அலெக்ஸ் கெரி ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் 6ஆம் விக்கெட்டுக்காக 212 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

பின்னர், இந்த இரண்டு வீரர்களின் அபார இணைப்பாட்டத்துடன் அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றி இலக்கினை 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களுடன் அடைந்தது. அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இணைப்பாட்டத்தினை பகிர்ந்த வீரர்களில் கிளேன் மெக்ஸ்வெல் தன்னுடைய இரண்டாவது ஒருநாள் சதத்துடன் 90 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில், தன்னுடைய கன்னி ஒருநாள் சதத்தினைப் பதிவு செய்த, அலெக்ஸ் கெரி 114 பந்துகளுக்கு 106 ஓட்டங்களை எடுத்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணானது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் கிளேன் மெக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார்.

இப்போட்டியின் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை கைப்பற்றியிருக்கும் அவுஸ்திரேலிய அணி, தமது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து கொள்கின்றது.


Add new comment

Or log in with...