ஜனாதிபதி, பாதுகாப்பு செயலர் கொலை அச்சுறுத்தல்; 2ஆவது பிரதிவாதி 'பொடி லெசி'

காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உட்பட உயர்மட்ட சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக ‘பொடி லெசி’ என்றழைக்கப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க என்ற பாதாள உலக நபரை அது தொடர்பான வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிட காலி பிரதான மாஜிஸ்திரேட் ஹர்ஷன கெக்குலுவல அனுமதி வழங்கியுள்ளார்.

தர்மகீர்த்திகே தாரக பெரேரா என்ற கொஸ்கொட தாரகவும் ‘பொடி லெசி’ என்பவரும் பூஸா முகாமில் வைத்து ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் உயர் மட்ட சிறை அதிகாரிகள் மீது பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த செப்டம்பர் 08 ஆம் திகதி குற்றச் செயல்கள் விசாரணை திணைக்களமும் சட்ட மாஅதிபர் திணைக்களமும் குற்றம் சாட்டி வழக்கு தாக்கல் செய்திருந்தன.

உண்ணாவிரதமிருந்து வந்த சிறைக்கைதிகள் சிலரை நேரில் பார்ப்பதற்காக மேற்படி பிரமுகர்கள் பூஸா சிறைக்கு சென்றிருந்தபோதே சம்பந்தப்பட்ட பாதாள உலக நபர்கள் இருவரும் இவ்வாறு பகிரங்க கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்ததாக தெரிய வந்துள்ளது.  அதனையடுத்து ‘பொடி லெசி’யை சிறையில் வைத்து விசாரணை செய்ய அனுமதிக்குமாறு காலி சிரேஷ்ட மஜிஸ்திரேட்டிடம் குற்றச்செயல்கள் விசாரணை திணைக்களம் விண்ணப்பமொன்றை சமர்ப்பித்திருந்தது. அத்துடன் எதிர்வரும் செப். 25 ஆம் திகதி சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறும் கேட்டிருந்தது. சந்தேக நபர் பலத்த பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேடஅதிரடி பிரிவு மூலம் பாதுகாப்புடன நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...