மாகாண சபை முறையை அரசாங்கம் ஒருபோதும் ரத்து செய்ய போவதில்லை | தினகரன்

மாகாண சபை முறையை அரசாங்கம் ஒருபோதும் ரத்து செய்ய போவதில்லை

'ரணில் விக்கிரமசிங்கவினாலேயே ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியைச் சந்தித்து, இறுதிப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க எதைச் செய்தாலும் பிரயோசனமில்லை'
சம்பிக்க ரணவக்கவுடன் சந்திப்பு
'மாகாண சபை முறையை அரசாங்கம் ரத்து செய்யப் போவதில்லை' என்று கூறுகின்றார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. எமக்கு வழங்கிய பேட்டியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி: இம்முறை பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?

பதில்: உண்மையில் இந்தத் தோல்விக்கு நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பல பக்கங்களிலிருந்தும் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களே காரணமாகும். விசேடமாக அன்றைய ஆட்சியில் மைத்திரிபால மற்றும் ரணிலுக்கிடையே காணப்பட்ட கயிறிழுப்பு காரணமாக நாடு பாதிப்புக்குள்ளானதென மக்களிடையே கருத்தொன்று உருவானது. அதே போன்று சில ஊடக நிறுவனங்கள் மத மற்றும் இனரீதியாக துவேஷமான கருத்துகளை மக்களிடையே விதைத்து அது தொடர்பாக குற்றச்சாட்டுகளை நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சுமத்தி திட்டமிட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. விசேடமாக சஹரானின் தாக்குதலை காரணமாகக் காட்டி யுத்த காலத்தில் கூட ஏற்படாத மதவிரோதத்தை உருவாக்கினார்கள். இவ்வாறான நிலைமையில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் அனைத்து மக்களுக்கும்,அரச ஊழியர்களுக்கும் செய்த நல்லவற்றை மறந்து மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த அனைவருக்கும் எதிராக வாக்களித்தார்கள்.

 

கேள்வி: எமது முன்னோர்களின் கூற்றொன்றுள்ளது. விதைத்ததைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பதே அதுவாகும். இந்த முடிவையும் நீங்கள் விதைத்ததுதான் கிடைத்துள்ளது என ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?

பதில்: இந்தத் தேர்தலில் நாம் தோல்வியை அவ்வாறு அர்த்தப்படுத்த மாட்டோம். ஏனென்றால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தது, சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்தது, நாட்டில் 2015ஆம் ஆண்டு இருந்ததை விட பொருளாதாரத்தை இரண்டு மடங்காக உயர்த்தியது, கல்வியிலும் சுகாதாரத்திலும் குறிப்பிட்டளவு மாற்றத்தை ஏற்படுத்தியது நாமேயாகும். விதைத்ததுதான் அறுவடை செய்ய முடியும் என்றால் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் திட்டமிட்டு எம் மீது குற்றங்களை சுமத்தி மக்களை வெறுப்படையச் செய்தன. குருநாகல் அரசசேவை மண்டபத்தை எமது அரசாங்கம் உடைத்திருந்தால் அரசாங்கத்தையே கவிழ்க்கும் அளவுக்கு பிரசாரத்தை மேற்கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால் கடந்த 9 மாதங்களாக அரசாங்கம் செய்த எந்த ஒரு விடயம் தொடர்பாகவும் மக்கள் மனதை தட்டி எழுப்ப எவரும் முன்வரவில்லை.அதனால் எதிர்காலத்தில் இவற்றின் பின்விளைவுகளை இந்த அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி நேரிடும்.

 

கேள்வி: மக்கள் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி அரசியலமைப்பை சீர்திருத்தி, புதிய அரசியலமைப்பை கொண்டுவர ஆணையை வழங்கியுள்ளார்கள். இதனை எவ்வாறு நீங்கள் நோக்குகின்றீர்கள்?

பதில்: இவர்கள் மக்களுக்கு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவோம் என்று கூறினாலும் அவர்கள் ஒருபோதும் புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்க மாட்டார்கள். ராஜபக்‌ஷக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 19 ஐ திருத்தி, மாற்றி அமைத்து 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்து அங்கீகாரம் பெறுவார்கள். ஆனால் புதிய அரசியலமைப்பை உருவாக்க மாட்டார்கள்.

 

கேள்வி: நீங்கள் அவ்வாறான முடிவை எதனை அடிப்படையாகக் கொண்டு கூறுகின்றீர்கள்?

பதில்: நீங்கள் அறிவீர்கள், 2012 ல் இவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக் கூடியதாக இருந்தது. அன்றும் இவர்கள் அரசியலமைப்பை மாற்றுவதாகக் கூறினார்கள். ஆனால் செய்தார்களா? அன்றும் மாகாணசபையை ரத்து செய்வதாக கூறினார்கள், நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் நீக்குவதாகக் கூறினார்கள். ஆனால் என்ன செய்தார்கள்? 18 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து இன்னும் ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தை கேட்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இம்முறையும் அதனையே செய்வார்கள். அவர்கள் கூறுவது போன்று மாகாணசபை முறையை ரத்து செய்யுமாறு கூறுங்கள். நான் கூறுகிறேன், இவர்கள் ஒருபோதும் மாகாணசபை முறைமையை ரத்து செய்ய மாட்டார்கள். தேசியவாத சக்திகள் இவ்வாறான தேவதைக் கதைகளை கூறித் தாமும் ஏமாறுவதுடன் மக்களையும் ஏமாற்றுவார்கள்.

 

கேள்வி: நீங்கள் அரசியலமைப்பில் 13வது அரசியல் திருத்தம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்களா?

பதில்: பதின்மூன்றாவது திருத்தம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். தற்போது அதனை ரத்து செய்ய வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நானும் அதனையே கூறுகின்றேன். ஆனால் இந்த அரசாங்கம் அதனை செய்யாது. அரசாங்கத்துக்கு அதனை செய்யவும் முடியாது.

 

கேள்வி: பொதுமக்களின் வாக்குகளால் ஒரு பிரதிநிதியை கூட பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியாத ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக்கு உங்கள் பெயரும் கூறப்பட்டதாக சில செய்திகள் கூறுகின்றனவே?

பதில்: இல்லை, அது தவறாகும். ஐக்கிய தேசியக் கட்சி தலைவரை மாற்றி அதனை மீட்கக் கூடிய நிலையில் கட்சி இல்லை. தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்ரீதியாக இறுதிப் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.அதைத் தடுக்க எதைச் செய்தாலும் பிரயோசனமில்லை.

 

கேள்வி: ஐக்கிய மக்கள் சக்தியை ஆக்கிரமித்து அதனை உங்கள் வசப்படுத்த போவதாக உங்கள் கட்சியிலேயே சிலர் கூறுகின்றார்கள். அது தவறான செய்தியா?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி பெயரளவில் வேறாக போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 95 வீதமானோர் ஐக்கிய மக்கள் சக்திக்கே வாக்களித்தார்கள். அதனால் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை தொடர்ந்தும் எதிர்பார்க்க மாட்டார்கள். அது ரணில் விக்கிரமசிங்க உடனேயே ரத்தாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் ரீதியாக தோல்வி அடையவில்ைல. சரிவையே சந்தித்துள்ளது. அது மீள எழுந்து விடும் எனக் கூற முடியாது. எவ்வேளையிலாவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாக அவர்கள் கூறினால் அது பற்றி ஆலோசிக்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்கவினாலேயே வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அவர்தான் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும். அவ்வாறான தலைவர்களை எமது கட்சியுடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அனைவரையும் எம்முடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

 

கேள்வி: ஹெல உறுமயதான் தேசியவாத அரசியலுக்கு ஆரம்பத்தை அளித்தது. அவ்வாறான நீங்கள் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது என ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்?

பதில்: நாம் தேசியவாத அரசியல் தவறென்று கூற மாட்டோம். நாம் கூறுவது, அதற்காக தெரிவு செய்த நபர்கள் தேசியவாதிகள் அல்ல என்பதாகும். அவர்கள் சிங்கள மொழிக்கோ, பௌத்த மதத்துக்கோ நேர்மையானவர்கள் அல்ல. குறுகிய காலத்தில் மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள்.

 

கேள்வி: தேசியவாத அரசியல் மூலம் உங்களால் வெற்றி பெற முடியவில்லை அல்லவா?

பதில்: நாம் வெற்றியடையவில்லை என யார் கூறுகின்றார்கள்? நாம் தேசியவாத அரசியலை உண்மை பாதிப்படைந்த வேலையிலேயே ஆரம்பித்தோம். அதன் மூலம் எம் மக்களிடையே 'சிங்கள நாடு, எமது நாடு' என்ற எண்ணத்தை உருவாக்க முடிந்தது. வீரர்களுக்கு அது பலமாக அமைந்தது. அந்த தேசியவாத அரசியல் காரணமாகத்தான் இன்று இந்த நாடு 'சிங்கள பௌத்த நாடு' என்ற கருத்து உலக ரீதியாக உள்ளது.

 

கேள்வி: மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்திக்காகஅரசாங்கம் புதிதாக நியமித்துள்ள அமைச்சரவை பலம் வாய்ந்தது என எண்ணுகிறீர்களா?

கேள்வி: இந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும் போது எமக்கு சிரிப்பு வருகின்றது. யானை வேலி அமைச்சு, அகழி அமைச்சு, மண் அமைச்சு போன்ற அமைச்சுகளை உருவாக்கி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது. முன்னரும் அமைச்சுகள் மூலம் இவை நிறைவேற்றப்பட்டன. இதற்கு முன்னர் பித்தளைக் கைத்தொழில், மட்பாண்டக் கைத்தொழில், பிரம்பு கைத்தொழில் என்பன நடைபெறவில்லையா? அன்று நான் அமைச்சராக இருந்த வேளையில் 'கஜ மித்துரு’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினேன். அதன் மூலம்தான் யானைகளுக்கான வேலி, அகழி என்பன அமைக்கப்பட்டன .வனவிலங்கு திணைக்களத்தாலேயே அவ்வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. நிறுவனங்களின் பேரால் இன்று அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பலம் வாய்ந்த அமைச்சுகளை ஒரு சிலர் பிடியில் வைத்துக் கொண்டு ஏனயோரை மகிழ்ச்சிப்படுத்த சிறுசிறு விடயங்களுக்காக அமைச்சுப் பதவிகளை வழங்கி உள்ளார்கள். அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை தமது ஆதரவாளர்களுக்கு கூறவே கூச்சப்படுகிறார்கள்.

 

கேள்வி: எப்போது இந்த அரசியல் கயிறிழுப்பின்றி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல்வாதிகளை உருவாக்குவது?

பதில்: நல்லாட்சி அரசாங்கம் நீங்கள் கூறிய இந்த தேசிய அரசியலை இந்நாட்டில் உருவாக்க முயற்சி செய்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அதற்கான பாதையை ஏற்படுத்திக் கொண்டன.

ஆனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீடித்தது. ஆனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு நாட்டில் தேசிய அரசியலுக்கு பதிலாக கட்சி அரசியலுக்கு புதிய கட்சி ஒன்றை உருவாக்கியது. அதுதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகும்.நாம் இந்த அரசாங்கம் செய்யும் நல்ல காரியங்களுக்கு ஆதரவு வழங்குவோம். இடைக்கால கணக்கறிக்கயை அங்கீகரிக்க நாம் ஆதரவு வழங்கினோம். நாம் மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த ஒரு விடயத்துக்கும் ஆதரவு வழங்க தயாராக உள்ளோம்.

ஜயசூரிய உடுகும்புற...?

(தமிழில்: வீ.ஆர்.வயலட்)


Add new comment

Or log in with...