தமிழகத்தின் உண்மையான தந்தை ஈ.வெ.ரா. பெரியார்

142வது பிறந்த தினம் நேற்று

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எனும் செல்வந்தர் காங்கிரஸ் பேரியக்கத்தில் பணிபுரிந்தார். பெரும் செல்வந்தரின் மகன். அவரது மொழிகளில் சொல்வதானால் இளம்பராயத்தில் மைனராக அலைந்து திரிந்தவர். சமூக வேறுபாடுகளைக் கண்டு மனம் கொந்தளித்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து கொண்டே கல்வி, வேலை வாய்ப்பில் வகுப்புவாரி பிரதிநித்துவத்துக்காக போராடினார். காங்கிரஸ் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் 1925-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். சாதிய அடிப்படையிலான சமூக வேறுபாடுகளுக்கு காரணமான அனைத்தையும் பெரியார் கண்டித்தார், விமர்சித்தார், எதிர்த்தார்.

சாதியை, மதத்தை ஒழித்து நாத்திகனாக, மானமும் அறிவும் உள்ள சுயமரியாதைக்காரனாக மனிதர்கள் வாழ பிரசாரம் செய்தார். தம் பெயருக்கு பின்னால் போட்டிருந்த நாயக்கர் சாதி பட்டத்தை பெரியாரும் தூக்கி எறிந்தார். அவரை பின்பற்றியோரும் தூக்கி எறிந்தனர்.

சமூகத்தின் சரிபாதி பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என குரல் கொடுத்தார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உள்ளிட்ட புரட்சிகர தீர்மானங்களை அம்மாநாட்டில் நிறைவேற்றினார். அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டன. அரசாங்கத்தில் இருந்த நீதிக்கட்சி மூலமாக இடஒதுக்கீடு, கோவில் நுழைவு என சாத்தியமான அத்தனையையும் சாத்தியப்படுத்தினார் தந்தை பெரியார். அதுவரை ஒடுக்கப்பட்டிருந்த பெரும்பான்மை மக்கள் தங்களது சமூக விடுதலைக்கான பயணத்தில் மானமும் அறிவும் உள்ளவர்களாக பெரியாரின் தலைமையை ஏற்றனர்.

தம் வாழ்நாள் முழுவதும் தேர்தல் அரசியல் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் தந்தை பெரியார். தம்மை தேடிவந்த முதல்வர் பதவியை தூக்கி எறிந்தவராக இருந்தார். சிறைக்கு அஞ்சாத சிங்கமாக இருந்தார். இந்திய அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தமாக இடஒதுக்கீட்டை இடம்பெறச் செய்தவர் தந்தை பெரியார்.


Add new comment

Or log in with...