எழுத்தாளர்களில் ஆளுமை நிறைந்தவர் கொட்வின் இராஜேந்திரநாத் சாமுவேல் | தினகரன்

எழுத்தாளர்களில் ஆளுமை நிறைந்தவர் கொட்வின் இராஜேந்திரநாத் சாமுவேல்

மலையக எழுத்தாளர் மன்றம் அனுதாபம்

மலை நாட்டு எழுத்தாளர் மன்ற முக்கிய ஆளுமைகளில் ஒருவரான கொட்வின் இராஜேந்திரநாத் சாமுவேல் தனது 71 வயதில் காலமாகி விட்டார்.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரியுடன் இணைந்து 1976 இல் நடத்திய ஐந்தாவது மலைய சிறுகதை போட்டியில் பரிசு பெற்றவர் அவர். 1970 முதல் மலை நாட்டு எழுத்தாளர் மன்ற தலைவர் என்.எம் ராமையா மற்றும் எஸ்.எம். கார்மேகம் ஆகியோரோடு தொடர்புகளை ஏற்படுத்தி மன்றத்தின் பணிகளுக்கு பக்கபலமாக நின்று பணியாற்றியவர்.

இர. சிவலிங்கம், எஸ். திருசெந்தூரன் தலைமையில் செயல்பட்ட மலையக இளைஞர் முன்னணி நடவடிக்கைகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு பங்களிப்பு நல்கியவர். பெருந்தோட்ட நிர்வாகத் துறையில் நன்கு அனுபவங்களை பெற்றுக் கொண்ட இவர் சமூக அபிவிருத்தி துறையிலும் புலமை மிக்கவர். வீரகேசரி, தினகரன், தினபதி, சிந்தாமணி செய்தி பத்திரிக்கைகளில் மலையக மேம்பாட்டு குறித்து எழுதியதோடு ஆங்கிலம், சிங்கள மொழிகளிலும், சமூக ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மக்கள் பணி இயக்கமான வெண்சிலுவை இணையத்தின் ஸ்தாபகருமான இவர் ஒரு இயேசு உபாசருமாவார்.

'புனிதர்களை நீங்கள் தனியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் அவர்கள் நம்மில் ஒருவர்களாக வாழ்கிறார்கள்' என்ற ஒரு ஆங்கில பழமொழியை அடிக்கடி நினைவு கூரும் கொட்வின் நம்மில் ஒருவராகவே வாழ்ந்த காயத்திரி சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷி சுவாமிகளின் அன்புக்கு அருளுக்கும் பாத்திரமானவர். 'சுவாமிகளின் வாழ்வையும், பணியையும் பற்றி கேட்டும், வாசித்தும் அறிந்தது எனது அதிர்ஷ்டம் என்றாலும் அவரை உணர்ந்து அனுபவிக்க முடிந்தது பரத்தில் எனக்கென வாய்த்த அரிதான கிருபையாகும்' என்ற சிந்தனையோடு வாழ்ந்த கொட்வின் இராஜேந்திரநாத் சாமுவேல் 'காயத்திரி ஸ்ரீ முருகேசு மகரிஷி வாழ்வும் பணியும்' என்ற நூலை எழுதி சித்தர் பரம்பரைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

சுவாமிகளுடன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்புகளையும் வைத்திருந்தவர். நடைமுறை மதவாதங்களில் இருந்து அனைவரும் விடுதலை அடைந்து மீண்டும் பாரம்பரிய இறைகொள்கைகளை கடைப்பிடிக்க விரும்புவர்.

நம்மில் நாம் நேசம் கொள்ளும் விதமாகவே அயலவர்களையும் நேசிக்க வலியுறுத்தும் காயத்திரி சித்தர், பிரமரிஷி மலை அன்னைச்சித்தார் ராஜ்குமார் சுவாமிகளால் ஈர்க்கப்பட்டவர். மக்கள் பணியையே மகேசனிட்ட ஆணையாக இலங்கையிலும், பல ஐரோப்பிய ஆபிரிக்க நாடுகளிலும் பல குழுவினர்களுக்கு சமூகப் பணிகளில் பயிற்சி அளித்துள்ளார். பல அரசசார் நிறுவனங்களுக்கும், ஏனைய சமய ஸ்தாபனங்களுக்கும் ஆலோசகராக பணியாற்றிய இவர், அனுபவம் வாய்ந்தவர்.

மலைநாட்டு எழுத்தாளர் மன்ற சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற இவரது சிறுகதை பற்றி இர.சிவலிங்கம் கருத்து தெரிவிக்கையில் "சாமுவேல் எழுதியுள்ள சிறுகதை உணர்ச்சி பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது.உணர்ச்சி ததும்பும் நடை,சருகுகளும் தளிர்களும் சேர்ந்து விழும் சோகப் படலம் முழுமையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. தோட்டங்கள் 1970களில் கையேற்கப்படும் முறையை வெகு அழகாக ஆசிரியர் சித்தரிக்கின்றார். கதை சிறியதுதான், எனினும் அதில் நீண்ட ஒரு வரலாற்றையே காட்டியுள்ள பாணி கதைக்கு மெருகூட்டுகிறது. பல்வேறு வகைகளில் சிறப்புடையதாக 'அந்த எமதூதன் எக்காலம் ஊதிய போது' என்ற கதை அமைகின்றது" என்று பதிவு செய்திருக்கிறார். அன்னாரின் ஆத்மா 16.09.2020 புதன்கிழமை அன்று ஹல்துமுல்ல புனித செபஸ்தியன் தேவாலயத்தில் இளைப்பாறச் சென்று விட்டது. மலையக எழுத்தாளர் மன்ற சார்பில் எங்கள் அஞ்சலிகள். ஓம் ஜெயகுருவே துணை.

எச்.எச்.விக்கிரமசிங்க...?


Add new comment

Or log in with...