13 கோடி 60 இலட்சம் தமிழர்களுக்காக உலகத் தமிழ் பாராளுமன்றம் உதயம் | தினகரன்

13 கோடி 60 இலட்சம் தமிழர்களுக்காக உலகத் தமிழ் பாராளுமன்றம் உதயம்

உறுப்பினர்களாக எட்டு நாடுகளின்  எம்.பிக்கள், செனட்டர்கள், அமைச்சர்கள்

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு பல பிரிவுகளை உருவாக்கி வருகிறது. அதில் அரசியல் பிரிவில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், கனடா, பப்புவா நியூ கினி, கயானா போன்ற எட்டு நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் 147 பேரும், மத்திய அமைச்சர்களாக 14 பேரும் உள்ளனர்.

உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவும் அரசியல் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகள் பெறவும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளை அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தீர்வு காணவும் இவ்வமைப்பு பாடுபடவுள்ளது.

அரசியலில் பல்வேறு கொள்கைகள் இருந்தாலும் தமிழராய், பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் செய்து அரசாங்கங்களுடனான அனுசரணையோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்வு காணவும், பல்வேறு நாடுகளுடன் இறையாண்மையுடன் நல்லுறவு ஏற்படுத்தவும் இவ்வமைப்பு செயல்படும்.

இவ்வமைப்பிற்கு பன்னாட்டு ஒருங்கிணைப்பாளராக செல்வகுமார் பணியாற்றுவார். இலங்கைக்கு சுப்பிரமணிய தியாகுவும், சிங்கப்பூருக்கு ராஜேந்திர பூபதியும், மலேசியாவிற்கு தீனதயாளனும், மொரிஷியஸுக்கு நித்யானந்தாவும் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றுவர். கனடாவிற்கு ஆலன் டீன் மணியம், கயானா மற்றும் பப்புவா நியூ கினிக்கு ஜனகன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளனர்.

உலகில் 13 கோடி 60 இலட்சம் தமிழர்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 2% உள்ள தமிழர்களின் நலன் பேண அனைத்து நாடுகளில் அரசின் பிரதிநிதிகளைப் பெற்று மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமுதாயமாக மாற்ற முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், விரைவில் எட்டு நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இணையவழியில் ZOOM பொதுவிவாதம் ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உலகத் தமிழ் பாராளுமன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவருமான செல்வகுமார் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...