அன்னையின் காலடியில் சொர்க்கம்

உலக மாந்தர்களில் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புகளில் ஈடு இணையற்றது தாயின் அன்புதான். மனைவியானாலும், மக்களானாலும், உடன்பிறந்தோர் ஆனாலும், உற்றார்-உறவினர்களானாலும் அந்த அன்புக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் தாயன்புக்கு எல்லையில்லை.

ஒரு பெண் கற்பமாவது முதல் அவள் பிரசவிக்கும் வரை படும் வேதனைகளை, அவள் பெற்றெடுக்கும் குழந்தை 'அம்மா' என்று அழைத்தவுடன் அத்துணை வேதனையையும் அடியோடு மறந்துவிடுகிறாள்.

தான் பெற்ற குழந்தையை பாலூட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்து ஆன்றோர்களின் அவைதனில் தன்பிள்ளை சான்றோனாக மதிக்கப்பட தன்னையே மெழுகுவர்த்தியாக கரைத்துக்கொள்கிறாள்.

தான் வளர்த்த பிள்ளை தறுதலையானாலும் அந்த தாய் ஒதுக்கிவிடுவதில்லை. தான் வளர்த்த பிள்ளை தன்னை அநாதை விடுதியில் சேர்த்தாலும், அனாதையாக தெருவிலே விட்டுவிட்டாலும் அந்தத்தாய் தன் பிள்ளையை சபிப்பதில்லை. அதனால் தான் உலகில் இழந்த எந்த உறவையும் மீட்டெடுக்கமுடியும் தாயைத்தவிர!

மனைவி வெறுத்துவிட்டால் மற்றொரு மனைவியை திருமணம் செய்து ஈடு செய்துவிடலாம். ஒரு பிள்ளை வெறுத்து விட்டால் இன்னொரு பிள்ளையை கொண்டு ஈடு செய்து விடலாம். உடன்பிறந்தோர் வெறுத்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் அண்ணன்- , தம்பி என்று அழைத்து ஆனந்தப்பட்டு கொள்ளலாம். ஆனால் ஒரு தாயின் அன்பை நாம் இழந்துவிட்டால் அந்த அன்பை எந்த அன்னியப்பெண்ணாலோ , அல்லது அன்னையின் உடன்பிறந்தவர்களாலோ கூட தர முடியாது. இத்தகைய மகத்தான தகுதி தாய்க்கு உள்ளதால்தான் இஸ்லாம், உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தலைவர் ரசூல்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அடுத்தபடியாக தாயை நேசிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறது.

அப்துல் ஹாலிக்,
பஸ்யால.


Add new comment

Or log in with...