அல் - குர்ஆனின் அற்புதம் | தினகரன்

அல் - குர்ஆனின் அற்புதம்

வல்லமை படைத்த அல்லாஹ்தஆலாவை ஆசானாகவும் வகுப்பாளராகவும் கொண்டது தான் அல் குர்ஆன். அது முற்றிலும் அவனது வசனங்கள், சொற்கள். அதில் வேறு எவரது சொல்லும் வசனமும் கிடையாது. அல்லாஹ்வின் ஏற்பாடு, கட்டளை மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஊடாக காலசூழ்நிலைகளுக்கு அமைய கட்டங்கட்டமாக அருளி உலகில் செயலுருப்படுத்தப்பட்டது. இருந்தும் இக்குர்ஆனில் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது ஒரு சொல்கூட கிடையாது. அதனை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.  

‘(நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் வழி தவறிவிடவுமில்லை. தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தன் இஷ்டப்படி எதனையும் கூறுவதில்லை. இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை. (ஜிப்ரீல் என்னும்) பராக்கிரமசாலியே இதனை அவருக்கு கற்றுக்கொடுக்கிறார். அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். (தன் இயற்கை ரூபத்தில் அவர் உங்கள் முன்) தோன்றினார். அவர் உயர்ந்த வானத்தின் கடைக் கோடியிலிருந்து இறங்கினார். பின்னர் நெருங்கினார். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார். (அல்லாஹ்) அவருக்கு (வஹி மூலம்) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார்.’(அல் குர்ஆன் 53:2- − 10)  

மற்றொரு வசனத்தில் ‘அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கியருளப்பட்டுள்ளது. யாதொரு வார்த்தையையும் அவர் எம்மீது கற்பனை செய்து பொய்யாகக்கூறினால், அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு அவருடைய உயிர்நாடியை நாம் தறித்துவிடுவோம்’(அல் குர்ஆன் 69: 43-  − 46)  

அதேநேரம் முஹம்மத் (ஸல்) அவர்களும் 'நானும் உங்களைப்போன்ற ஒரு மனிதர் தான். எனக்கு அல்லாஹ் அறிவிப்பதை உங்களுக்கு கூறுகின்றேன். மற்றப்படி வேறெதுவுமே என்னிடமில்லை' என ஒரு தடவை குறிப்பிட்டுள்ளதாக ஹதீஸில் பதிவாகியுள்ளது.  

இதன்படி வஹி மூலம் அறிவிப்பட்டதை ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். அதனையே நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு எடுத்துக்கூறி அறிவித்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ள அல்லாஹ், அவர் யாதொரு வார்த்தையையும் எம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறுவதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றான். நபி (ஸல்) அவர்களும் அதனையே கூறியுள்ளார்கள்.  

இவை அனைத்தும் அல் குர்ஆன் முற்றிலும் அல்லாஹ்வினுடையது என்பதை தெளிவாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  

இக்குர்ஆன் பாதுகாப்பட்ட பதிவேடான லஃஹுல் மஹ்பூலில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அதே ஒழுங்கில் தான் உலகிலும் இருக்கின்றது. உலகம் இருக்கும் வரையும் இதே ஒழுங்கில் தான் இது நீடித்து நிலைத்திருக்கும். ஒவ்வொரு மனிதனதும் இம்மை மறுமை வாழ்வின் சுபீட்சத்தையும் விமோசனத்தையும் நோக்கமாகவும் இலக்காகவும் கொண்டுள்ள இக்குர்ஆன், அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு முழுமையான வாழ்க்கைநெறியாகும்.  

இவ்வாறு சிறப்பும் மகத்துவமும் பெற்று விளங்கும் இக்குர்ஆன், கி.பி. 571இல் சவூதி அரேபியாவின் மக்காவில் பிறந்து வளர்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அன்னாரின் 40வது வயது முதல் அதாவது கி.பி 610முதல் 633வரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமாக அருளப்பட்டதோடு ஏக காலத்தில் செயலுருப்படுத்தப்பட்டு 23வருட காலப்பகுதியில் முழுமைப்படுத்தப்பட்டது.  

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அருளப்பட்ட இக்குர்ஆன் மக்களுடன் உரையாடியபடி தான் இறங்கியது. இதனைப் பெற்றுக்கொண்ட முதல் சமூகத்தினர் வாழ்ந்த காலப்பகுதி இன்று போன்று வளர்ச்சி அடைந்திராத போதிலும் அம்மக்களது அறிவுத்தரத்திற்கு ஏற்ப அவர்களால் விளங்கிப் புரிந்திடக்கூடியதாக விளங்கியது இக்குர்ஆன்.  

அதேநேரம் இக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் அருளப்பட்ட போதிலும் அது உலகம் இருக்கும் வரையும் தோற்றம் பெறும் எல்லா நவீன யுகங்களிலும் பிறக்கும் அனைத்து மக்களோடும் உரையாடக்கூடியதாகவும் அவர்களால் விளங்கி புரிந்திடக்கூடியதாகவும் விளங்கிக்கொண்டிருக்கின்றது. அதேநேரம் இக்குர்ஆன் அருளப்பட்ட பிரதேசத்திற்கோ, நூற்றாண்டுக்கோ மாத்திரமுரியதல்ல. அது உலகலாவிய பொதுமறையாகும்.  

இக்குர்ஆன் அருளப்பட்டு 14நூற்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அது என்றும் உயிரோட்டம் மிக்கதாகவும் நடைமுறைச் சாத்தியமானதாகவும் திகழுகின்றது. இன்றைய நவீன அறிவியல் டிஜிட்டல் யுக மக்களுடனும் உயிரோட்டத்துடன் உரையாடுகின்ற இக்குர்ஆன், இதே ஒழுங்கில் மறுமை வரையும் நீடித்திருக்கும். இது குர்ஆனுக்கேயுரிய மாபெரும் தனித்துவமும் அற்புதமுமாகும். அன்று அருளப்பட்ட குர்ஆன் தான் இன்றும் இருக்கின்றது. அன்றைய மக்களுக்கு எவ்வாறு நடைமுறைச் சாத்தியமானதாக அமைந்ததோ அதேபோன்று இன்றைய அறிவியல் வளர்ச்சி பெற்ற மக்களுக்கும் அது நடைமுறைச்சாத்தியமானதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் உள்ளது.  

ஆனால் இக்குர்ஆன் அருளப்பட்ட நூற்றாண்டில் முன்வைக்கப்பட்ட ஏனைய கொள்கைகள், எழுதப்பட்ட நூல்களில் பெரும்பாலானவை இருந்த இடமே தெரியாமல் செல்வாக்கு இழந்து அழிந்துவிட்டன. ஒரு சில அரும்பொருட்காட்சியங்களில் காட்சிப்பொருளாக உள்ளன.  

ஆனால் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமானதாக விளங்கும் இக்குர்ஆன் உயிரோட்டத்துடன் திகழுவதற்கு அது அல்லாஹ்வின் படைப்பு, ஆக்கம் என்பது தான் ஒரே அடிப்படையாகும்.  

இது தொடர்பில் அல் குர்ஆனுக்கு 'ததப்பருல் குர்ஆன்' என்ற பெயரில் விளக்கவுரை எழுதியுள்ள அல்லாமா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.  

‘அல் குர்ஆன் அல்லாஹ்வின் வேதம். அது முன்சென்றோர் பின்வருவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் தொடர்பான அறிவையும் கொண்டுள்ளது. உலகம் இருக்கும் வரையும் அது நிலைத்திருக்கக்கூடியதாகும். அது மக்களுக்கு நேர்வழிகாட்டல் வழங்கிக்கொண்டே இருக்கும். அதனால் அதன் அற்புதங்கள் ஒரு போதும் முடிவுறா’ என்றுள்ளார்.  

அது தான் உண்மை. உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் நேர்வழிகாட்டல் வழங்கத் தேவையான அத்தனை பண்புகளையும் தன்மைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது இக்குர்ஆன். உலகம் இருக்கும் வரையும் சமூகங்கள் தோன்றி மறைவது தொடராக நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதனால் அந்தந்த கால சமூகங்களை சேர்ந்தவர்கள் குர்ஆனை அணுகும் போது அவர்கள் தமக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். அவ்வாறு ஒவ்வொருவரும் எவ்வளவு தான் இக்குர்ஆனிலிருந்து அருள் வளங்களைப் பெற்றுக்கொண்டாலும் அதில் எவ்வித குறைபாடும் ஏற்படாது. அந்தளவுக்கு அருள் நிறைந்த வளமான அற்புதம் அல் குர்அன்'.  

அதேநேரம் ‘இக்குர்ஆனை ஒரிரு முறை ஒதிவிட்டால் அல்லது படித்தவிட்டால் அதன் அனைத்து அறிவு வாசல்களையும் அடைந்துவிடலாமென எதிர்பார்க்க முடியாது. அது அல்லாஹ்வின் வற்றாத அறிவியல் ஊற்று. அது ஒரு மாபெரும் சுரங்கம். அது எவ்வளவு ஆழ அகலமாக அணுகப் படுகின்றதோ அந்தளவுக்கு அதன் பிரதிபலன்களை அடைந்து கொள்ளலாம்.’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இதேவேளை 'தப்ஸீர் ஷாராவி' என்ற பெயரில் இக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியுள்ள இமாம் முதவல்லி ஸாராவி (ரஹ்) அவர்கள் இக்குர்அனின் அற்புதம் தொடர்பில், இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ‘குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் காணப்படுகின்றது. அவை இந்நூற்றாண்டின் செய்திகளோடு கொஞ்சமும் பிசகாமல், முரண்படாமல், மோதல் நிலையை அடையாமல் ஒத்துப்போகக்கூடியதாக உள்ளது. இது குர்ஆன் கொண்டிருக்கும் மாபெரும் அற்புதமாகும். இக்குர்ஆன் அருளப்பட்ட மக்களது அறிவோடு எவ்வாறு ஒத்துப்போனதோ அதேபோன்று நவீன கண்டுபிடிப்புக்களும் அறிவியல் வெளிப்பாடுகளும் நிறைந்த இந்த 21ஆம் நூற்றாண்டோடும் ஒத்துப்போகின்றது. இக்குர்ஆனின் வசனங்களிலும் சொற்களிலும் எவ்வித மாற்றங்களுமே ஏற்படவில்லை. அதன் பொருட்களும் ஒன்று தான். ஆனால் காலத்திற்கு ஏற்ப அதன் விளக்கம் விரிவடைந்து செல்கின்றது. இப்படியான அற்புதத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலுமே நிகழ்த்த முடியாது' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.(அடுத்த வாரம் நிறைவுறும்)

மர்லின் மரிக்கார்    


Add new comment

Or log in with...