இலக்கிய உலகில் அழியாத தடம் பதித்தவர் முகில்வண்ணன்

கிழக்கின் மூத்த இலக்கியவாதியின்  மறைவுக்கு அன்பர்கள் அனுதாபம்

 

கிழக்கிலங்கையின் மூத்த இலக்கியவாதி வே.சண்முகநாதன் (முகில்வண்ணன்) காலமாகி விட்டார். இவரது மறைவு குறித்து இலக்கிய அன்பர்கள் உட்பட பல தரப்பினரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

'முகில்வண்ணன் மறைந்த செய்தி கேட்டு துயரடைந்தேன். பார் போற்றும் பாண்டிருப்பு மண்ணில் பல இலக்கியவியலாளர்கள் தோன்றி தமிழ் பேசும் உலகில் தமது அழியாத தடங்களை பதித்துள்ளனர். இவர்களின் வரிசையில் அமரத்துவமடைந்த முகில்வண்ணன் என்னும் புனைபெயரைக்கொண்ட வே.சண்முகநாதனும் ஒருவர். இவரின் இழப்பு தமிழ் இலக்கிய பரப்புக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமரத்துவமடைந்த வே.சண்முகநாதன் (முகில்வண்ணன்) வெறுமனே ஓர் இலக்கியவாதி மட்டுமல்ல. அன்னார் அரசதுறையில் உதவிப் பொறியியலாளராக கடமையாற்றியவர். போர்ச்சூழல் நிரம்பிய காலத்தில் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையில் மக்கள் பணி புரிந்துள்ளார்.

இலங்கையின் புகழ் பூத்த திரௌபதை அம்மன் ஆலயம் என்று உலக மக்களால் பேசப்படும் கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய அறங்காவல் சபையின் தலைவராக சில காலம் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர். சிறுகதை, நாவல், கவிதை என பல்துறைகளிலும் தனது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிக்கொணர்ந்த அன்னார் மிகவும் அமைதியாகவே ஆர்ப்பரிப்பு எதுவுமின்றி தனது இலக்கிய பயணத்தை இறுதி மூச்சுவரை தொடர்ந்தவர்.

கிழக்கிலங்கையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட இலக்கிய நிகழ்வுகளில் தனது பிரசன்னத்தை வெளிப்படுத்தி அனைவரோடும் இலக்கிய உலகில் அன்பைப் பகிர்ந்தவர். இத்தகைய விருட்சம் ஒன்று வீழ்ந்தது என்று செய்தி கேட்டு அனைவரும் துயரம் கொள்கின்றோம் என்று இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செ.பேரின்பராசா...?

(துறைநீலாவணை நிருபர்)


Add new comment

Or log in with...