ஒப்சேர்வர் - மொபிடெல் 2020; சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்,வீராங்கனை விருது வழங்கல் விழா

ஒப்சேர்வர்- - மொபிடெல் 2020ஆம் வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 2020வருடத்துக்கான தெரிவுக் குழுவின் சந்திப்பு அடுத்த இரண்டு வாரங்களில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

இலங்கை படசாலைகள் கிரிக்கெட் சங்கத்திலும் மற்றும் நடுவர்கள் சங்கத்திலும் உயர்மட்ட அதிகாரிகளின் தலைமையின் கீழ் இந்த விழா நடைபெறவுள்ளது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்க குழுவுக்கு அதன் தலைவரான நாலந்தாக் கல்லூரியின் அதிபர் திலக் வத்துஹேவா தலைமை தாங்குகிறார். 

விருது பெறும் வீர வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டவுடனேயே 42ஆவது ஒப்சேர்வர் - மொபிடெல் 2020ஆம் வருடத்துக்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருது வழங்கல் விழாவின் சரித்திரத்தை பின்னோக்கிப் பார்ப்போமானால் 1996ஆம் ஆண்டு உயர் விருதுகள் இரண்டுமே கொழும்புக்கு வெளியே சென்றதைக்காண முடியும். 

1996இல் வெற்றியாளர்களின் வரிசையில் மீண்டும் திரித்துவக் கல்லூரியும் சென். பெனடிக்ட் கல்லூரியும் இடம்பிடித்திருந்தன. திரித்துவக் கல்லூரியின் குமார் சங்கக்கார சிறந்த துடுப்பாட்டக்காரராகவும், சென். பெனடிக்ட் கல்லூரியின் பிரதீப் ஹேவகே சிறந்த களத்தடுப்பாளராகவும் தெரிவாகினர். குமார் சங்கக்கார துடுப்பாட்ட வீரராக விருதுவென்ற அதேசமயம் திரித்துவக் கல்லூரி மத்திய மாகாணத்திலிருந்து சிறந்த அணியாக தெரிவாகியது.  

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரராக, தெரிவானதையடுத்து 2000ஆம் ஆண்டு சங்கக்கார இலங்கையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அவர் இலங்கைக்காக 15வருடங்கள் விளையாடியதுடன் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியதும் குறிப்பிடத்தக்கது. 

அதே ஆண்டு (1996) சென். செபஸ்டியன் கல்லூரியின் நிமேஸ் பெரேரா ஒப்சேர்வர் –பாட்டா வருடத்தின் சிறந்த வீரர் விருதையும் பாதுக்க ஸ்ரீ பியரத்ன மகா வித்தியாலய கிரிக்கெட் அணியின் தலைவர் சந்தன சமரசிங்க சிறந்த வெளியூர் கிரிக்கெட் வீரராகவும் தெரிவானார். 

ஒப்சேர்வர் - மொபிடெல் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது ஒன்றுதான் 42வருடங்களாக தொடர்ந்து இடம்பெற்று வரும் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கல் விழாவாகும். 

1996ம் ஆண்டு உலக சாம்பியன்களை உருவாக்கிய வருடமாகும். உலக கிண்ணத்தை வென்ற அணியில் இருந்த 16வீரர்களில் 10பேர் ஒப்சேர்வர் வருதை வென்றவர்கள் ஆவர். அர்ஜுன ரணதுங்க இரண்டு தடவையும் ரொஷான் மஹாநாம தொடர்ந்து 2முறையும் அசங்க குருசிங்க ஒரு தடவையும் அரவிந்த டி சில்வா, மார்வன் அத்தபத்து, முத்தையா முரளிதரன், குமார் தர்மசேன, ஹஷான் திலகரத்ன, ரொமேெஷ் களுவிதாரண, சனத் ஜயசூரிய ஆகியோர் ஒப்சேர்வர் விருதை பல அம்சங்களில் வென்றவர்கள். 

சிறந்த கிரிக்கெட் வீரர் வென்ற நிமேஷ் பெரேரா தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் 100விக்கெட்களை கைப்பற்றினார். சிறந்த பந்துவீச்சாளர் விருதை வென்றதுடன், சிறந்த சகலதுறை வீரருக்கான பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அவர் 1605ஓட்டங்களை கொடுத்து 134விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அதன்மூலம் 11.97என்ற கவர்ச்சிகரமான சராசரியை பெற்றிருந்தார். அத்துடன் 26இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 764ஓட்டங்களையும் பெற்றார். அதில் இரண்டு ஆட்டமிழக்காத இன்னிங்ஸ்கள் அடங்கும். 

1995ம் ஆணடு நிமேஷ் பெரேரா சிறந்த வீரருக்கான போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். அவ்வருடம் விருதை வென்றவர் ஆனந்தாக் கல்லூரியின் திலான் சமரவீர ஆவார். இரண்டாவது முறையாகவும் அவர் தொடர்ந்து சிறந்த வீரருக்கான விருதை வென்றது குறிப்பிடத்தககது. 1996ம் ஆண்டு இந்த நிலை மாறியது. நிமேஷ் சிறந்த வீரர் விருதையும் திலான் இரண்டாவது இடத்தையும் பெற்றனர். 

1996ம் ஆண்டு பாதுக்க ஸ்ரீபியரத்ன மகா வித்தியாலய அணியின் தலைவர் சந்தன சமரசிங்க சிறந்த வெளியார் கிரிக்கெட் வீரராக தெரிவானமை ஒரு கனவு நனவான சம்பவம் போன்றதாகும். 1995ம் ஆண்டு மேற்படி ஸ்ரீபியரத்ன மகா வித்தியாலய அணி சிறந்த வளர்ந்து வரும் அணியாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1996இல் சிறந்த வெளியூர் கிரிக்கெட் வீரராக மடடுமன்றி சிறந்த சகலதுறை வீரராகவும் தெரிவானார். 27இன்னிங்ஸ்களில் அவர் மொத்தம் 1192ஓட்டங்களைப் பெற்றார். அதில் இரண்டு ஆட்டமிழக்காத இன்னிஸ்களும் அடங்கும். அவரது ஓட்ட சராசரி 47.92ஆகும். அதேநேரம் பந்துவீச்சில் அவர் 1449ஓட்டங்களைக் கொடுத்து 105விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அதேநேரம் ஸ்ரீபியரத்ன அணிக்கு தலைமை தாங்கி விளையாடிய 18போட்டிகளில் 11போட்டிகளை வென்றுகொடுத்தார். 5போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில் 2போட்டிகள் மட்டுமே தோல்வியில் முடிந்தன. 

ஜூனியர் உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து சென்ற 15வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியில் விளையாடிய இரண்டு கிரிக்கெட் வீரர்களும் ஒப்சேர்வர் விருதுகளை வென்றவர்களாவர். வத்தளை சென். அந்தனீஸ் அணியின் விக்கெட் காப்பாளர் ஜே. சிவனேசராஜா மற்றும் லும்பினி மகா வித்தியாலய வீரர் ரணில் தம்மிக்க ஆகிய இரு வீரர்களே இவர்களாவர். இவர்களில் சிவனேசராஜா வெளியூர் வீரர்களுக்கிடையே இரண்டாவது சிறந்த களத்தடுப்பாளர் விருதையும் தம்மிக 1996ஆம் வருடம் பாராட்டுதலுக்காக மெரிட் விருதையும் பெற்றனர். 

2020ஆம் வருட ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் விருது விழாவில் batsman.lk என்ற இணையத்தளம் மிகவும் பிரபல்யமாகியுள்ளது. 

முன்னய ஆண்டுளைப்போன்று ஒட்டு மொத்த சம்பியன் அணி இம்முறை தெரிவு செய்யப்படமாட்டாது. கொவிட்-19காரணமாக இறுதிச் சுற்றுப்போட்டிகள் இம்முறை விளையாடப்படாததே இதற்கு காரணமாகும். எனினும் சிறந்த வெளியூர் அணி தெரிவு செய்யப்படும். கொவிட் 19காரணமாக 2019/2020பருவகாலத்தின் 19வயதானவர்களுக்கான இறுதி நிலைப் போட்டிகள் சிலவும் வெளியூர் பாரிய மோதல் என்ற ‘பிக் மெச்’ போட்டிகள் சிலவும் விளையாடப்படாமல் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறெனினும் ஒப்சேர்வர் மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கிடையிலான போட்டிகள் முன்னரைப் போலவே இம்முறையும் (2020) சுவாரஷ்யம் மிக்கதாக இருக்கும். எஸ்.எல்.டி மொபிடெல்லின் பிரதான நிறைவேற்று அதிகாரி நளின் பெரேரா மொபிடெலுக்கான பங்களிப்புகளை தொடர்ந்து 13ஆவது தடவையாகவும் பெற்றுக் கொடுத்துள்ளதுடன் விழாவுக்கான செயற்பாடுகளுக்கு முழு மூச்சுடன் ஒத்துழைப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...