யார் இந்த சிதம்பரம்? | தினகரன்

யார் இந்த சிதம்பரம்?

பழநியப்பன் சிதம்பரம் என்கிற ப. சிதம்பரம் நேற்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்தியாவின் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்தவர் அவர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.  

சிதம்பரம் பிறந்ததே பெரிய பணக்கார குடும்பத்தில்தான். இவரின் அம்மா வழி தாத்தா இந்தியாவின் புகழ் பெற்ற தொழில் அதிபர்களில் ஒருவரான அண்ணாமலைச் செட்டியார். இவர் தொடங்கியதுதான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். அதோடு இன்றைய இந்தியன் வங்கியை நிறுவியவர்களுள் ப சிதம்பரத்தின் குடும்பத்தினர்களுக்கும் பெரிய பங்கு உண்டு.  

சென்னை லயோலா கல்லூரியில் பியூசி, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை புள்ளியியல், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ என பெரிய படிப்பு படித்தவர் ப. சிதம்பரம். குடும்பத்தில் நல்ல சொத்து. ஜவுளி வியாபாரம், வர்த்தகம், விவசாயம் என இருந்தாலும் சிதம்பரத்துக்கு அதில் எல்லாம் ஆர்வம் வரவில்லை. அவர் தன் போக்கில் வழக்கறிஞராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  

இன்னொரு பக்கம் எம்.ஆர்.எஃப், கே.சி.பி, நகர போக்குவரத்துக் கழகம் போன்றவைகளில் வர்த்தக யூனியன் தலைவராகவும் பதவியில் இருந்திருக்கிறார். அதோடு இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம் போன்றவர்களுடன் சேர்ந்து Radical Review என்னும் பத்திரிகை வேலைகளையும் பார்த்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வேலை பார்க்கத் தொடங்கி, 1984-ம் ஆண்டில் மூத்த வழக்கறிஞர் ஆனார்.  

அதன் பின்னும் பல மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டு ஒரு வழக்கறிஞராகவே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இப்படிச் சட்டப் பணிகளில் ஒரு பக்கம் பயணித்துக் கொண்டிருக்க, அரசியலில் மெல்ல வளரத் தொடங்கினார். 1984-இல் காங்கிரஸ் கட்சி சார்பில், முதல் முறையாக சிவகங்கை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். 1986-ல் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசில் மத்திய இணை அமைச்சர் பதவி.  

சிதம்பரம் என்றாலே 1991மாற்றங்கள்தான் உடனடியாக நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் சிதம்பரம் வணிக அமைச்சகத்தில் இணை அமைச்சராக அமர்த்தப்பட்டார். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பதவியில் இருந்தார். அந்த காலங்களில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் பல முக்கியமான கொள்கை முடிவு மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் வருவதற்கு ப. சிதம்பரமும் ஒரு முக்கிய காரணம். 

1996-ல் தேவ கெளடா அரசில் தான் முதன் முறையாக நிதி அமைச்சர் பதவியில் அமர்ந்தார். 1997-ல் முதல் முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு வயது 52. அதன் பின் தேவ கெளடா அரசு கவிழ்ந்து, அதன் பின் ஐ.கே.குஜ்ரால் அரசிலும் நிதி அமைச்சரானார். அதுவும் தாக்கு பிடிக்கவில்லை. குஜ்ரால் அரசும் கவிழ்ந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது.  

நிதி அமைச்சராக அமர்ந்த பின் தமிழகத்தில் தனியாக, 'காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை' என்கிற பெயரில் தனிக் கட்சி எல்லாம் நடத்திப் பார்த்தார். சரிவரவில்லை. 2004தேர்தல் காலங்களுக்கு முன் மீண்டும் தாய் கழகமான காங்கிரஸிலேயே கட்சியை இணைத்துக் கொண்டு சேர்ந்தார். மீண்டும் 2004-ல் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றார். 2004-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க நிதி அமைச்சகம் மீண்டும் சிதம்பரம் கையில்.  

இந்தியாவிலேயே அதிக முறை மத்திய அரசின் பட்ஜட்டைத் தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய். 10முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். அவருக்கு அடுத்து சிதம்பரம்தான். அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். எட்டு பட்ஜட்களைத் தாக்கல் செய்து சாதனை படைத்து இருக்கிறார்.  

2004-ம் ஆண்டுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்தின் சட்ட நிபுணர்கள் அணியில் வேலை பார்த்தது, அமுலாக்கத் துறையின் வழக்குகளில் வேதாந்தா நிறுவனம் சிக்கிய போது, அமுலாக்கத் துறைக்கு எதிராக வாதாடியது, அதன் பின் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒரு இயக்குநராக பதவி வகித்தது, 1984சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ப. சிதம்பரம் மீது காலணி வீசப்பட்டது, 2011-ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சர்ச்சையில் பேசப்பட்டது என தொடர்ந்து ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு இருக்கும் அனைத்து சர்ச்சைகளும் இருந்து கொண்டே இருக்கின்றன.  

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் சிக்கி இருக்கிறார். சமீபத்தில்தான் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தார். பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து, பெரிய வழக்கறிஞராக வலம் வந்து, இந்தியாவின் மிக முக்கிய நிதி அமைச்சகத்துக்கே தலைமை தாங்கி, இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் சென்றவர் இப்போது தன் வழக்கை எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பது பெரும் கேள்வி.  


Add new comment

Or log in with...