வாகனங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்கள் இறக்குமதி தடை

வாகனங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்கள் இறக்குமதி தடை-Temporarily Holding Vehicles and Other Non Essential Items

பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க நடவடிக்கை

உள்நாட்டில் பயிரிடக்கூடிய அல்லது தயாரிக்கக்கூடியதுமான அத்தியாவசியமற்ற பொருட்கள், வர்த்தக பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தலை தற்காலிகமாக இடை நிறுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக வெளிநாட்டு நாணய மதிப்பின் மீது ஏற்பட்ட தாக்கத்தை குறைக்கும் நோக்குடன் இறக்குமதியை முறையாக முன்னெடுத்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வழமை நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை, கடந்த ஏப்ரல் 01ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டது.

அதற்கமைவாக 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டுதல் மற்றும் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக, சுங்க வரிகளை தீர்மானிக்கும் குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. அத்தோடு அந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இடைக்கால நடவடிக்கை என்ற ரீதியில் இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதி பொருட்களை 3 பிரிவுகளாக வகைப்படுத்தி பின்வருமாறு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • உள்நாட்டில் பயிரிடக்கூடிய அல்லது தயாரிக்கக்கூடியதுமான அத்தியாவசியமற்ற பொருட்கள், வர்த்தக பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தலை தற்காலிகமாக இடை நிறுத்துதல்
  • வழங்குனர்களால் பெற்றுத் தரப்படும் கடன் வசதியின் அடிப்படையில் அல்லது வெளிநாட்டு செலாவணி செலவிடப்படாத வகையில், தெரிவு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குதல்
  • உள்நாட்டு கைத்தொழில்கள், விவசாயக் கைத்தொழில், ஏற்றுமதி தயாரிப்பு, உள்நாட்டு நுகர்வுக்கு அவசியமான தெரிவு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குதல்.

இதற்கமைவாக மேலே குறிப்பிடப்பட்ட படிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான விதிகளை அறிந்து வெளியிடப்பட்ட 04 விஷேட வர்த்தமானிகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கென சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
1979 ஆம் ஆண்டு இலக்கம் 40 இன் கீழான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ்கண்ட இலக்கை அடைவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  • சுகாதார அமைச்சினதும், முப்படை மற்றும் கொவிட் மத்திய நிலையத்தினதும் கோரிக்கையின் அடிப்படையில் கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையை தடுப்பதற்கு தேவையான மருந்து, இரசாயன பொருட்கள், சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள், இயந்திர தயாரிப்பு மற்றும் இறக்குமதி செய்யும் போது அல்லது இறக்குமதி செய்து வழங்கும் போது அல்லது இறக்குமதி செய்து நன்கொடையாக வழங்கும் போது, செஸ் வரி செலுத்துவதில் இருந்து விடுவித்தல்.
  • போட்லண்ட் சீமெந்து இறக்குமதியின் போது அதற்கான செஸ் வரியை விகித அடிப்படையில் அறவிடுவதற்கு பதிலாக, எண்ணிக்கைக்கு அமைய அறவிடுதல்.
  • சீமெந்து அச்சுகளை இறக்குமதி செய்யும் போது செஸ் வரியை நீக்குதல்.
  • காலணிகளை தயாரிப்பதற்கு தேவையான ஒருசில பாகங்கள், இழை பல்புகள் (Filament Bulbs) மற்றும் எளிதில் வளையக்கூடியதாக பொதியிடும் பொருட்களை இறக்குமதி செய்யும் போது செஸ்வரியை விதித்தல்

Add new comment

Or log in with...