ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடெ சூகா | தினகரன்

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடெ சூகா

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடெ சூகா (Yoshihide Suga) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டு பாராளுமன்றம் அவரை தெரிவு செய்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான 71 வயதுடைய ஷின்சோ அபே, பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சுகவீனம் காரணமாக தனது இராஜினாமாவை கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானின் தேசிய சட்டமன்றமான டயட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 462 வாக்குகளில் 314 வாக்குகளை பெற்று அவர் இலகுவாக வெற்றி பெற்றுள்ளார்.

70 வீத வாக்குகளுடன் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராக யொஷிஹிடெ சூகா தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராக வருவதற்கு முன்னர் நாட்டின் தேசிய சட்டமன்றமான டயட்டின் ஆதரவு அவருக்கு தேவைப்பட்டதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷின்சோ அபேயின் நெருங்கிய வலது கரமான புதிய பிரதமர்  யொஷிஹிடெ சூகா, தனது முன்னோடிக் கொள்கைகளை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்தோடு, முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே தனது இரண்டாவது பதவிக்காலம் முழுவதும் கிட்டத்தட்ட 8 வருடங்கள் பதவியில் இருந்தபோது, ​​அவரது வலது கையாக யொஷிஹிடெ சூகா இருந்ததோடு, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவையில் பிரதான அமைச்சரவை  செயலாளராகவும்பதவி வகித்திருந்தார்.

தான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் அட்டைப்பெட்டி நிறுவனமொன்றில் தொழிலாளராக பணி புரிந்துள்ள யொஷிஹிடெ சூகா, மீன் சந்தையொன்றிலும் பணியாற்றியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Add new comment

Or log in with...