ஆடவரின் தலையில் உதைத்த பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்

அவுஸ்திரேலியாவில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்படும்போது பொலிஸ் வாகனத்தால் மோதப்பட்டு தலையில் உதைக்கப்பட்டதால் சுயநினைவை இழந்தார்.

32 வயது ஆடவர் தற்போது மெல்பர்னில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மனநலப் பிரச்சினைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆடவர் தப்பிக்க முயன்றதால் மருத்துவ ஊழியர்கள் பொலிஸாரை அழைத்தனர்.

வீதியை கடக்கும் ஆடவர் பொலிஸ் வாகனத்தால் மோதப்படுவது வீடியோ ஒன்றில் தெரிகிறது. மற்றொரு வீடியோவில் ஆடவரின் தலையில் அதிகாரி ஒருவர் உதைக்கிறார். பின்னர் மேலும் ஐவர் அவரை தரையில் தடுத்துவைப்பது தெரிகிறது. ஆடவருக்கு ஏற்பட்ட காயங்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்படுவதாக அவரின் வழக்கறிஞர் கூறினார். பொலிஸ் அதிகாரிகள் அளவுக்கு அதிகமான வன்முறையைப் பயன்படுத்தியதாக ஆடவரின் தந்தை குற்றஞ்சாட்டினார்.

இதனுடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்தப்படுவதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...