பனாமாவில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிப்பு

மதப்பிரிவு ஒன்றினால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கொண்ட பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பில் பனாமா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பழங்குடியினர் வாழும் தொலைதூர வடமேற்குப் பிராந்தியமான நிகாபே பக்லேவில் உள்ள இந்தத் தளத்தில் இருந்து எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகில் உள்ள மற்றொரு புதைகுழியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தீவிரமான பேயோட்டும் சடங்குகளைப் பின்பற்றும் மதப்பிரிவு ஒன்றுடன் தொடர்புபட்டதாக இந்த சடலங்கள் உள்ளது என கூறப்படுகிறது.

10 மணி நேரம் மலையேறியே இந்த புதைகுழி இருக்கும் இடத்தை அடைந்ததாக அரச வழக்கறிஞர் அசாயேல் டுக்ரி தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில், எத்தனை பேர் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் அவர்கள் ஆணா, பெண்ணா என்று கண்டறிய முடியாதிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புபட்டு குறித்த மதக் குழுவின் தலைவர் இந்த வார ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தப் புதைகுழியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மற்றும் அவரது ஐந்து குழந்தைகள், பதின்ம வயது ஒருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


Add new comment

Or log in with...