பலாங்கொடை உதைபந்தாட்ட சம்மேளன லீக் போட்டிகள்: வெற்றிக் கேடய அறிமுக நிகழ்வு | தினகரன்

பலாங்கொடை உதைபந்தாட்ட சம்மேளன லீக் போட்டிகள்: வெற்றிக் கேடய அறிமுக நிகழ்வு

அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எப். ஏ.கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தொடரின் பலாங்கொடை பிரதேச உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகள் எதிர்வரும் வாரங்களில் நடைபெறஏற்படாகியுள்ளன.

இதனை முன்னிட்டு இப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள பலாங்கொடை பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட உதைப்பந்தாட்ட அணிகளுக்கான அறிவுறுத்தல் மற்றும் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு அண்மையில் பலாங்கொடை பொது விளையாட்டு மைதான மண்டபத்தில் நடைபெற்றது.

பலாங்கொடை நகர சபை உறுப்பினர், லால் கலப்பத்தி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதேசத்தின் உதைபந்தாட்ட சம்மேளன ஏற்பாட்டு அதிகாரிகள், உதைபந்தாட்டப் பயிற்சியாளர்கள், அணிகளின் முகாமையாளர்கள், தலைவர்கள் உட்பட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு இப்போட்டித் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கிண்ணம் அறிமுகம் செய்யப்பட்டதுடன் எதிர்வரும் வாரங்களில் நடத்தப்படவுள்ள போட்டிகளின் விபரங்களும் அறிவுறுத்தல்களாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

 

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...