போதுமென்ற மனம் வேண்டும்!

உயிர்களுக்கு வாழ்வளிக்கும் புவிக்கு  மனிதன் ஆற்ற வேண்டிய கைங்கரியம்

ஓசோன் படையை பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் இன்று

'வாழ்க்கைக்கான ஓசோன்’ என்ற மகுட வாசகமானது புவியில் உயிர்களின் நிலைப்புக்கு ஒசோனின் முக்கியத்துவத்தையும், எமது எதிர்கால சந்ததிக்காக அதனை நாம் பாதுகாக்க வேண்டியமையையும் உணர்த்தி நிற்கிறது'

ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். ‘ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு 1994 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தால் வழிநடத்தப்பட்டு சகலரதும் கூட்டு நடவடிக்கைகள் மாத்திரமே உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி என்பதை இத்தினம் உணர்த்தி நிற்கிறது.

வாழ்க்கைக்கான ஓசோன்’ என்ற மகுட வாசகமானது புவியில் உயிர்களின் நிலைப்புக்கு ஒசோனின் முக்கியத்துவத்தையும், எமது எதிர்கால சந்ததிக்காக அதனை நாம் பாதுகாக்க வேண்டியமையையும் உணர்த்தி நிற்கிறது.

ஒரு பொருளை, தசாப்தங்களாக, சந்ததிகளாக பாவித்துப் பெருமை கொள்வது எம் வழமையாகும். “இந்தப் பொருள் எனது பேரன் பேத்தி காலத்திலிருந்து எங்கள் வீட்டில் இருக்கிறது” என்று சொல்வதில் நாம் எப்போதும் பெருமிதம் கொள்வதுண்டு. இன்று உலகெங்கும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளூடாக நாடுகள் அடையப் பாடுபடும் நிலைபெறுதகு நுகர்வை எம்முன்னோர்கள் அன்றே கைக்கொண்டவர்கள்.

எமது பண்பாடும் கலாசாரமும் வாழ்க்கைப் பாங்கும் நிலைபெறுதகு நுகர்வினை அடிப்படையாகக் கொண்டவை. சூழல்நேயப் பொருட்களின் பாவனையும், ஒரே பொருளைப் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி அதன் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதும் பொருட்களின் மீள்சுழற்சியும் நீண்ட காலப் பாவனையும் என எம் பாரம்பரிய வாழ்க்கைப்பாங்கு அமைந்ததை எவரும் மறுக்க முடியாது.

யுத்தமும் இடப்பெயர்வுகளும் வாடகை வீடுகளுமாக வடக்கு, கிழக்கு மக்கள் தற்காலிக வாழ்வுக்குப் பழகத் தொடங்கினர். அத்தசாப்தங்கள் கடந்து அவற்றுக்குப் பின்னரான நிரந்தர வாழ்வை மக்கள் வாழவும் தொடங்கி விட்டனர். இழந்தவையுடன் சேர்த்து மக்கள் தமது சூழல்நேய வாழ்க்கைப் பாங்கையும் இழந்து விட்டார்களோ என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றும்.

நவீனத்துக்கும் பாரம்பரியத்துக்கும் இடையே வாழ்வை எதிர்கொள்ளப் போராடும் நாம் சில விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எம்முடைய நுகர்வுப் பாங்கு முற்றாக மாறி விட்டது. எம் அன்றாட வாழ்வு மின் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் சூழவே நகர்கிறது. இந்த மின், இலத்திரனியல் சாதனங்களை நாம் நீண்ட காலத்துக்கு உபயோகப்படுத்த இயலாது.

உதாரணமாக குளிர்சாதனப் பெட்டியை எடுத்துக் கொள்வோம். மூன்று தசாப்தங்களாகப் பாவித்து வந்த குளிர்சாதனப் பெட்டியை இப்போதும் பாவிப்பதற்கு எவரும் சிபாரிசு செய்வதில்லை. ஏனெனில், குளிர் சாதனப்பெட்டியைப் பொறுத்தவரையில், மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் உற்பத்தி செய்தவற்றில் குளிரூட்டும் வாயுவாக குளோரோ புளோரோ காபன் காணப்பட்டது. அவ்வாயுவானது வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படையை சிதைக்கும் வல்லமையை அதிகம் கொண்டதாகையால் அதனைப் பதிலீடு செய்யும் வகையில் புதிய வாயுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஓசோன் படையில் துவாரங்கள் உருவாகின்றமை உலகளாவிய பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. அதன் காரணமாக ஊடறுத்து, புவியை வந்தடையும் புற ஊதாக் கதிர்களால் புவி வெப்பமடைதல் அதிகரித்தமை அறியப்பட்டது. இதே நிலைமை தொடர்ந்தால் புவியின் அழிவே உறுதியாகும் என எதிர்வு கூறப்பட்டது.

பழைய குளிர்சாதனப் பெட்டிகள் அதிகளவு மின்சாரத்தை நுகர்கின்றமையும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. அதிகரிக்கும் மின் நுகர்வானது தேவையின்றி வீட்டுச் செலவை அதிகரிப்பதோடு ஒருமித்த ரீதியில் முழுநாட்டினதும் மின் நுகர்வை அதிகரிக்கச் செய்ய ஏதுவாகிறது. இதுவும் சூழல் மாசுக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் பங்களிக்கிறது. பழைய மின்சாதனங்கள் யாவுமே இந்நிலைக்கு விதிவிலக்கல்ல. மனிதத் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, தொழில்நுட்பம் வேகமாக வளர்கிறது. முன்னைய தொழில்நுட்பத்திலுள்ள குறைபாடுகளைப் பின்னையது தீர்க்க முயல்கிறது. விளைவாக நுகர்வும் கழிவுகளும் அதிகரித்த வண்ணமே செல்கின்றன.

இவை இப்படியிருக்க, 1990 களில் 'ஓசோன்' என்ற சொல் மிகப் பிரபலமாயிருந்தது. ஓசோன் படையும் அதன் துவாரமும் புறஊதாக் கதிர்கள் பூமிக்கு வர ஏதுவானமையும் அதனால் புவி வெப்பம் அதிகரிக்கின்றமையும் பல திய நோய்கள் உருவானவையும் கூட நாம் அறிந்த விடயங்களே. புற்றுநோய், கண் குறைபாடுகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவடைதல், தோல் மூப்படைதல், சுவாசப் பிரச்சினைகள், பரம்பரை அலகுகளில் ஏற்படும் பிறழ்வுகளால் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறத்தல் என மனித இனம் பெரும் சவால்களை எதிர்நோக்குகிறது.

இச்சவால்கள் மனித இனத்துக்கு மட்டுமானவையல்ல. இப்பூவுலகில் காணப்படும் தாவரங்களும் விலங்குகளும் கூட தத்தமது மட்டத்தில் இதே சவால்களை எதிர்நோக்குகின்றன.

முன்னைய நாட்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் குளிரூட்டும் வாயுவாகவும் கரைப்பானாகவும் நுரை உருவாக்கியாகவும் பாவிக்கப்பட்ட குளோரோ புளோரோ காபனே ஓசோன் படை நலிவடைவதற்கான பிரதான காரணமாகக் கருதப்பட்டது. புவி வெப்பமடைதல், அதனாலும் வேறு பல காரணங்களாலும் இன்று விஸ்வரூபமெடுத்திருக்கும் காலநிலை மாற்றம், அவற்றின் பின்விளைவுகள் பற்றி நாம் தினமும் அறிந்த வண்ணமேயுள்ளோம்.

குளோரோ புளோரோ காபனின் பாவனை இலங்கையில் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. ஐதரோ புளோரோ காபன், காபன் நாற்குளோரைட், மெதைல் குளோரபோம், ஐதரோ புரோமோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ புளோரோ காபன், மெதைல் புரோமைட், புரொமோ குளோரோ மெதேன் போன்ற வாயுக்கள் குளோரோ புளோரோ காபனுடன் ஒப்பிடுகையில் குறைந்த வல்லமையுடையவையாக இருப்பினும், ஒசோன் படையை அரிக்கும் வல்லமை கொண்டவையாகத்தான் இருக்கின்றன.

இவ்வாறு வெளியிடப்படும் இவ்வாயுக்களைக் கட்டுப்படுத்தாவிடில் காலப்போக்கில் இவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென்பது கண்கூடு. குளிர்சாதனப் பெட்டிகள் மட்டுமன்றி நாம் அன்றாடம் போக்குவரத்தில் ஈடுபடும் இருசக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள் தொட்டு பேருந்துகள், புகையிரதங்கள் வரை இத்தகைய வாயுக்களை சூழலுக்கு வெளியிடுகின்றன.

இலங்கை 1989 ஆம் ஆண்டு மொன்றியல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் சுற்றாடல் அமைச்சிலே அமைக்கப்பட்ட தேசிய ஓசோன் அலகானது இவ்வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருதல் தொட்டு விதிமுறைகளை உருவாக்குதல், சூழல்நேயத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் கைக்கொள்வதற்கும் ஆதரவு வழங்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்தல் என பல்வேறு பரிமாணங்களில் தன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. வாகனங்களுக்குக் கட்டாயமாக்கப்பட்ட புகைப் பரிசோதனை தொட்டு வாகன இறக்குமதிக்கான தர நிர்ணயம், மின்சார பேரூந்துகளின் அறிமுகம், வாகன பழுதுபார்த்தல் சேவை நிலையங்களின் தர நிர்ணய விதிமுறைகளின் அமுலாக்கம், சுத்தமான வளி 2025 கொள்கை ஆவணத் தயாரிப்பு என தேசிய ஒசோன் அலகின் செயற்பாடுகள் பரந்து விரிந்து செல்கின்றன. ஆயினும் பொதுமக்கள் உட்பட சகலதரப்பினரும் ஒத்துழைத்தால் மாத்திரமே 'சுத்தமான வளி' என்ற இலக்கை எம்மால் அடைய முடியும்.

உயிர்ப்பல்வகைமை செறிந்த அழகிய தீவான இலங்கையின் பிரஜைகளாக, நாளைய சமுதாயத்துக்கும் இத்தீவின் இயற்கைச் செல்வத்தை பாதுகாத்து வைக்க வேண்டிய கடப்பாடுள்ளவர்களாக எம் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

இந்நிலையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல பாரம்பரியத்துக்கும் நவீனத்திற்குமிடையே போராடும் நாம் தீர்மானங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறோம். நீண்ட கால உத்தரவாதம் கொண்ட பொருட்களையே பார்த்துப் பார்த்து வாங்கிய எமது நுகர்வுப்பாங்கை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதேவேளை தொழில்நுட்பம் வளர வளர பொருட்களை மாற்றினால், கழிவுப் பொருட்களின் அளவு அதிகரித்துச் செல்லும் என்பது கண்கூடு. மின், இலத்திரனியல் கழிவுப்பொருட்கள் இலகுவாக மீள்சுழற்சி செய்யப்பட முடியாதவை. அப்படி மீள்சுழற்சி செய்யும் வசதிகள் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பரந்தளவில் காணப்படுவதுமில்லை.

(13ஆம் பக்கம் பார்க்க)

சாரதா மனோகரன்...? (உதவிப் பணிப்பாளர்)

வளி வளங்கள் முகாமைத்துவம் மற்றும் தேசிய ஓசோன் அலகு, சுற்றாடல் அமைச்சு


There is 1 Comment

Add new comment

Or log in with...