பறவைகளின் பிரமிக்கும் வாழ்க்கைக் கோலங்கள் | தினகரன்

பறவைகளின் பிரமிக்கும் வாழ்க்கைக் கோலங்கள்

பறவைகளின் அற்புத வாழ்வை ஆராயும்  இருநாள் இணையவழி செயலமர்வு

தரைக்குத் திரும்பாமல் ஆறு மாத காலம் ஆகாயத்தில் பறக்கும் பறவைகள், எலும்பை மாத்திரம் உட்கொண்டு உயிர் வாழும் தாடிக் கழுகுகள், ஒன்பது கிலோ மீற்றர் உயரத்தில் பறக்கும் வாத்துகள், துருவம் விட்டு துருவம் நோக்கி குடிபெயரும் அற்புத நாரை இனங்கள்...

 

'காக்கைக் கூடு' சுற்றுச்சூழல் அமைப்பினர் இம்மாதம் 5ஆம் 06 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாட்கள் இணைய வழி செயலமர்வில் பறவையியல் நிபுணர்களான சந்துரு வெங்கட்ராமன், விஷ்னு சங்கர், ஆர். அரவிந்த் ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

'பறவைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உண்மையில் பறவைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை, அற்புதமானவை. அவற்றின் உடலமைப்பு, செயற்பாடுகள், இயங்குநிலை என்பன பிரமிக்கத்தக்கவை.

இருந்த போதிலும் பறவைகள் தொடர்பில் பெரும்பாலானவர்கள் பெரிதாக கவனம் செலுத்துவதுமில்லை. அவற்றைக் கண்டு கொள்வதுமில்லை. ஆனால் அவற்றின் செயற்பாடுகளையும் இயங்குநிலையையும் நோக்குபவர் ஆச்சரியப்படவே செய்வர். அவை மனித வாழ்வுக்கும் கூட முன்னுதாரணமாக அமையலாம்.

அந்த வகையில் பறவைகள் தொடர்பில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உலகில் முதுகெலும்புள்ள ஐந்து வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவை, ஊர்வன, மீன், தவளை என்பன அடங்கும்.

இந்த உயிரினங்களை இளஞ்சூட்டு குருதி பிராணிகள் என்றும் குளிர் இரத்தப் பிராணிகள் என்றும் வகைப்படுத்தலாம். அவற்றில் இளஞ்சூட்டு குருதி பிராணிகள் சுற்றுச்சூழலில் காணப்படும் தட்ப வெப்ப மாறுதல்களால் பாதிக்கப்படாமல் தம் உடலின் வெப்பத்தை எப்போதும் ஒரே நிலையில் வைத்துக் கொள்ளும் இயல்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால் குளிர் இரத்தப் பிராணிகளாகிய மீன், தவளை, பாம்பு, பல்லி, ஆமை, முதலை உள்ளிட்ட உயிரினங்கள் சுற்றுச்சூழல் தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப தம் இரத்தத்தின் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

அதனால் வெப்ப இரத்தப் பிராணிகளை இரண்டு வகையாக வகுக்கலாம். அவற்றில் ஒன்று பாலூட்டிகள். மற்றையது பறவைகள். மனிதன், குரங்கு, ஆடு, மாடு, நாய், பூனை, புலி, திமிங்கிலம் போன்றவாறானவை பாலூட்டிகளாகவும், முட்டையிட்டு அடைகாப்பவை பறவைகளாவும் விளங்குகின்றன.

அந்த வகையில் பறவைகள் பார்ப்பதற்கு அதிக வேறுபாடுகள், வித்தியாசங்கள் அற்றவை போன்று தோற்றமளித்தாலும் அவற்றை கூர்ந்து அவதானித்தால் அவற்றின் வேறுபாடு ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்ற பல்வேறு வகைகளின் தொகுப்பாக விளங்குவதை அவதானிக்கலாம்.

முள்ளந்தண்டுள்ள உயிரினங்களில் பறவைகளைத் தவிர எந்த உயிரினத்திற்கும் சிறகுகளோ இறகுகளோ கிடையாது. இப்பறவைகளின் உடல் சிறகுகளாலும் இறகுகளாலும் மூடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பலவகை உள்ளன. குறிப்பாக பறப்பதற்கானவை, உடல் வெப்பநிலையைப் பேணிப் பாதுகாப்பவை, உணர்திறன் கொண்டவை என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கன.

இந்த இறகுகளிலும் பலவிதமான நிறங்களும் வண்ணங்களும் காணப்படுகின்றன. அவை பறவைகளுக்கு எழிலை அளிக்கக் கூடியனவாக உள்ளன. பெரும்பாலான பறவைகள் ஒரே விதமானவையாக காணப்படும். அவற்றில் ஆண், - பெண் வேறுபாட்டை இனம் காண முடியாது. என்றாலும் சில பறவைகளில் மாத்திரம் இந்த வேறுபாட்டை அவதானிக்கலாம். குறிப்பாக ஆண் மயில் தோகை அமைப்பைக் கொண்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். அதேநேரம் சில பறவைகளின் குரலோசை மிகவும் இனிமையானது. இன்னும் சில பறவைகள் பாடுவது போன்றே ஒசை எழுப்பும்.

பறவைகளின் உடலமைப்பு:

இவை இவ்வாறிருக்க, முதுகெலும்புள்ள உயிரினங்களில் அதிக உடல் வெப்பநிலையைக் கொண்டிருக்கும் உயிரினம் பறவைகள்தான். அவற்றின் உடல் வெப்பநிலையைப் பாதுகாப்பதில் இறகுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றின்ஆகக் குறைந்த வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் ஆகும். என்றாலும் அவ் வெப்பநிலை 44 பாகை செல்சியஸ் வரையும் செல்ல முடியும். அவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் 37 பாகை செல்சியஸுக்கு மேல் மனிதனின் உடல் வெப்பநிலை சென்றால் உடலில் காய்ச்சல் உள்ளிட்ட வேறுபல நோய்களின் அறிகுறி எனலாம்.

பறவைகளின் உடல் அதிக வெப்பநிலையைக் கொண்டிருப்பதன் மூலம் அவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் உணவு சமிபாடு அடைதல், அதன் மூலம் கிடைக்கப் பெறும் சக்தியை உடல் வேகமாக உறிஞ்சிக் கொள்ளுதல் என்பன சீராக இடம்பெறுகின்றன. அதனால்தான் பறவைகள் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. பறவைகளுக்கு அதிக சக்தி அவசியமானது. அவை பறக்கவும் இரை தேடவும், அவற்றைப் பாதுகாக்கவும், முட்டையிடவும் குஞ்சு பொரிக்கவும் இச்சக்தி தேவையானது. அச்சக்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலேயே அவை தொடராக உண்ணக் கூடியனவாக உள்ளன. பறவைகள் உட்கொள்ளும் உணவு உடனுக்குடன் சமிபாடு அடைந்து விடும். அதற்கேற்ற சமிபாட்டுத் தொகுதியை அவை பெற்றுள்ளன. இல்லாவிடில் அவற்றின் உடல் நிறை அதிகரித்து பறக்க முடியாத நிலைமை ஏற்பட்டு விடும். அதனால் சமிபாடு அடையாத உணவை வாய்வழியாகவும் எச்சமாகவும் பறவைகள் வெளியேற்றி விடும்.

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்துக்கும் பறவைகளின் உடல் வெப்பநிலை பெரிதும் உதவுகின்றது.

அதேநேரம் சுவாசிக்க பறவைகளுக்கு ஒட்சிசன் அவசியமானது. அவற்றின் சுவாசத் தொகுதி அவ்வாறான முறையில் அமைந்துள்ளது. பறவைகளில் நுரையீரலுக்கு மேலதிகமாக ஒன்பது காற்று பைகள் உள்ளன. அவற்றில் அவை ஒட்சிசனை சேமித்து வைத்துக் கொள்ளும். ஏனெனில் நான்கு கிலோ மீற்றர்களுக்கு மேலே செல்லும் போது ஒட்சிசன் குறைவடைந்து விடும். அதனால் மேலே பறக்கும் போது அவற்றின் சுவாசத்திற்கு தேவையான மேலதிக ஒட்சிசனை அதன் காற்று பைகளில் இருந்து பெற்று மூச்சு விடும்.

மேலும் பறவைகள் மத்தியில் காணப்படும் மற்றொரு விஷேட அம்சம்தான் உணவுக்காக குறிப்பிட்ட காலம் வருடாவருடம் புலம்பெயர்ந்து சென்று திரும்புதலாகும். இலங்கைக்கும் கூட நூற்றுக்கணக்கான பறவைகள் புலம்பெயர்ந்து வந்து செல்லுகின்றன. அந்த வகையில் மங்கொலியாவிலிருந்து இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு வருடாவருடம் வரும் வாத்து இனப் பறவையொன்று கடல் மட்டத்திலிருநது 9 கிலோ மீற்றர்கள் உயரத்திற்கு பறக்கக் கூடியதாகும். அதன் ஒட்சிசன் தேவையை காற்று பைகளில் இருக்கும் ஒட்சிசன் ஈடு செய்யக் கூடியதாக விளங்குகின்றது.

மேலும்,ஆட்டிக் துருவத்தில் குளிர்காலநிலை ஆரம்பித்ததும் அந்தாட்டிகா நோக்கி புலம்பெயரும் பறவைகள் உள்ளன. சில பறவைகள் அலஸ்காவிலிருந்து நியூசிலாந்துக்கு புறம்பெயர்கின்றன. இன்னும் சில பறவைகள் ஒன்பது பத்து நாட்களாக உணவோ, நீரோ அருந்தாது தொடராகப் பறந்து 10 ,- 12 ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூரம் புலம் பெயர்ந்து செல்கின்றன. இதன் காரணத்தினால் அவை இழக்கும் உடல் நிறையை புலம்பெயர்ந்து செல்லும் பிரதேசத்தில் பெற்றுக் கொள்ளும் உணவின் ஊடாக அவை பெற்று இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

இதேவேளை தரைக்கு கீழே இறங்காது சுமார் ஆறு மாத காலம் தொடராகப் பறந்து கொண்டிருக்கும் ஒரிரு பறவை இனங்களும் உலகில் உள்ளன. அவ்வகைப் பறவைகள் உண்பது, உறங்குவது, எச்சமிடுவது பறந்தபடியேயாகும். இப்பறவைகளில் ஒரு வகை இமயமலையிலுள்ள அல்பைன்ஸ் காட்டில் குஞ்சு பொரிக்கும். அவற்றின் குஞ்சுகள் வளர்ந்து சுயமாக செயற்படத் தொடங்கியதும் இப்பறவை மீண்டும் பறக்கத் தொடங்கி விடும்.

உணவு:

இதேவேளை பறவைகளின் உணவுப் பழக்கங்களை எடுத்துப் பார்த்தால் அவை வித்துக்கள், தானியங்கள், பழங்கள், இலைகள், மீன்கள், புழுக்கள், பூச்சிகள், இறந்த உயிரினங்கள் என்பவற்றை உணவாகக் கொள்ளக் கூடினவாக உள்ளன. அதிலும் காகம் அனைத்து உணவுகளையும் உணவாகக் கொள்ளக் கூடியனவாக உள்ளது. அதேநேரம் இமயமலை பகுதியில் பறவை இனமொன்று உள்ளது. அப்பறவை விலங்குகள் சாப்பிட்டு விட்டு விட்டுச் செல்லும் எலும்புகளையும் அவற்றின் தோலையும் உண்டு சீவிக்கும் பண்பைக் கொண்டுள்ளது. அதேபோன்று ஆபிரிக்காவில் காணப்படும் ஒரு வகைக் கழுகு இனம் சிங்கத்தின் எச்சங்களை உண்டு வாழக் கூடியனவாக விளங்குகின்றது.

இதன்படி விலங்குகளின் எலும்புகள் கூட சமிபாடு அடையக் கூடியவகையில் சில பறவைகளின் சமிபாட்டு தொகுதி பலம் மிக்கதாகவும் சக்திமிக்கதாகவும் விளங்குவது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

வாழ்வமைப்பு:

பறவைகள் உலகில் வாழாத இடமே இல்லை. 45 ,- 50 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படும் பாலைவனத்தில் வாழக் கூடிய மெக்மின் பஸ்டட் போன்ற பறவைகள் உள்ளன. அதேபோன்று அந்தாட்டிக்கா போன்ற 45-, 50 பாகை மறை செல்சியஸ் குளிர் பிரதேசங்களில் பெண்குயின் போன்ற பறவைகள் வாழ்கின்றன. அதாவது நூறு பாகை செல்சியஸ் சீதோஷண நிலை வித்தியாசத்தில் வாழக் கூடியனவாக பறவைகள் உள்ளன.

ஆன போதிலும் பறவைகளைப் பொறுத்த வரை, அவை வாழக் கூடிய சீதோஷண நிலை காணப்படும் எந்த இடத்திலும் கூடுகட்டி குஞ்சு பொரித்து வாழும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வீடுகள், மரங்கள், மரப்பொந்துகள், மலை முகடுகள், மின்கம்பம், தொலைத்தொடர்பு கோபுரம், தரைகள் மாத்திரமல்லாமல் பனிக்கட்டிகளிலும் கூட வாழக் கூடிய பண்பை அவை கொண்டுள்ளன.

இவ்வாறு எண்ணிறைந்த அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் தன்னக்கத்தே கொண்டிருக்கும் பறவைகள் மனிதனை பிரமிக்கச் செய்யக் கூடியவையே. ஆகவே பறவைகள் அற்புதமும் அதிசயமும் நிறைந்தவை என்றால் அது மிகையாகாது.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...