பஸ் ஒழுங்கையில் மோ. சைக்கிள், மு. வண்டிக்கு எதிர்ப்பு

- பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள குறித்த முடிவுக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பஸ் முன்னுரிமை ஒழுங்கையில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் பயணிப்பது சட்டவிரோதமானது எனவும் சுமார் 60 பயணிகளுடன் செல்லும் பஸ் வண்டியானது மந்த கதியில் செல்லும் முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து செல்வது எவ்வகையில் நியாயமானது என, அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அத்தோடு, மோட்டார் சைக்கிள்கள் வேகமாக பயணிக்கும்போது விபத்துகளும் சம்பவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், இவற்றுக்கு யார் பொறுப்புக் கூறுவார் எனவும் கேள்வியெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கைச் சட்டம் இன்று (16) முதல் மோட்டார் சைக்கிள்கள்,  முச்சக்கரவண்டிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, பஸ் வண்டிகள் பயணிக்கும் அதே பாதையில் (பாதையின் இடது பக்கத்தில்) மோட்டார் சைக்கிள்கள்,  முச்சக்கரவண்டிகள் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

வீதி ஒழுங்கைச் சட்டம் நேற்று முன்தினம் (14) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அது வெற்றிகரமாக அமைந்துள்ளதாக, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (15) இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளும் பாதையின் ஒவ்வொரு ஒழுங்கைக்கும் மாறி பயணிக்கும்போது, இது பாரிய பிரச்சினையாக உருவாகுவதாகவும், இதற்கு தீர்வாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இன்றையதினம் குறித்த ஒத்திகைக்கான இறுதி நாள் என்பதாலும், இந்நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காகவும், இடது புறத்தில் பஸ் வண்டிகளுக்கான முன்னுரிமை ஒழுங்கையில் மாத்திரம் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

தமது வாகனங்களுக்கு முன்னால் பயணிக்கும் பஸ் வண்டிகள், பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தும் வேளையில் சிறிய தாமதம் ஏற்படும் எனவும், ஆகையால் பொறுமை காக்குமாறும் அனைத்துச் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்வதாகவும், அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...