நாட்டின் மொத்த மின் தேவையில் 70 வீதம் மீள்பிறப்பாக்க சக்தி ஊடாக பெற முடிவு

பாடசாலைகள், அரசாங்க கட்டடங்களுக்கு சூரியசக்தியூடாக மின் வசதி

2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்க சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் காரணமாக அனல் மின் மற்றும் பெற்றோலியம் போன்ற எரிபொருட்களை தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளும் மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை நாடி வருகின்றனர். நாட்டின் மின் தேவையின் வருடாந்த அதிகரிப்பு 6 வீதமாகும்.

அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன் இணைந்ததாக மின்சக்தி வளத்திற்கான கேள்வி வேகமாக அதிகரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறைக்கு பெறுபேறுகளை அனுபவிக்கக்கூடிய பேண்தகு அபிவிருத்திக்கு வழிவகுக்கும் வகையில் முடியுமானளவு மீள்பிறப்பாக்க சக்தி வளங்களை பயன்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

திட்டத்திற்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ள நிறுவனங்கள் சாத்தியவள அறிக்கைகளை தயாரிக்க வேண்டுமென்பதுடன், அனுமதியை விரைவாக வழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஏதேனும் ஒரு திட்டத்தி்ற்கு அனுமதி கோரப்படும்போது 14 நாட்களுக்குள் அதற்கு பதில் வழங்கப்படாவிட்டால், அது அனுமதியளிக்கப்பட்டதாக கருதுவதே பொருத்தமானதென அவர் சுட்டிக்காட்டினார். மீள்பிறப்பாக்க சக்திவள அபிவிருத்திக்கு அரசாங்கம் அதிகம் முன்னுரிமையளித்துள்ளது. அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிடுமாறு அவர்,ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். டென்டர் நடைமுறையின் ஊடாக தெரிவு செய்யப்படும் அனைத்து திட்டங்களும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படாவிட்டால், வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ள 5,000 நீர்ப்பாசன திட்டங்களை அண்மித்ததாக சூரிய சக்தி தகடுகளை பொருத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். சூரியசக்தி திட்டங்களை குறித்த மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்களுக்கு மட்டுமே வழங்குவதும் அதன் நன்மையில் குறித்த வீதத்தை விவசாய சமூகங்களுக்கு வழங்குவதும் பொருத்தமானதாகுமென பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

 


Add new comment

Or log in with...