6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

ஆந்திர கடற்கரை மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காக்கிநாடாவுக்கு அருகில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கின்றது. இது அடுத்த 2 நாட்கள் வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யும்.

வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திர கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.


Add new comment

Or log in with...