எல்லையில் 9 மாதத்தில் 3,186 முறை அத்துமீறல் | தினகரன்

எல்லையில் 9 மாதத்தில் 3,186 முறை அத்துமீறல்

காஷ்மீரில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : 2020 ஜன.1 முதல் செப். 7 வரையிலான காலகட்டத்தில் 778 கி.மீ. தூரம் கொண்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதேபோல் 198 கி.மீ. தூரமுள்ள சர்வதேச எல்லைப்பகுதியிலும் ஜன. முதல் ஆக. வரை 242 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் 350 முதல் 400 முறை அத்துமீறியுள்ளது தெரியவந்துள்ளது. ராணுவ ஆவணங்களின்படி, 2017 ல் 971, 2018 ல் 1,629, 2019ல் 3,168 முறை பாக். ராணுவம் அத்துமீறியுள்ளது.

இது தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், சீனாவை எப்போதும் ஆதரிக்கவே பாகிஸ்தான் விரும்பும். பனிக்காலம் துவங்குவதற்கு முன்னர் காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கவும் விரும்புகிறது.

பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மறுபுறத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல் நின்றபாடில்லை. லடாக்கில், சீன எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

டாங்கிகள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப்பகுதிகளில், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை. எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில், இந்திய ராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...