ஜப்பான் ஆளும் கட்சி தலைவராக சுகா தேர்வு

சின்சோ அபேவின் இடத்திற்கு ஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக யொசிஹிடே சுகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் அந்நாட்டின் அடுத்த பிரதமராகவுள்ளார்.

உடல் நிலையைக் காரணம் காட்டி ஜப்பான் பிரதமர் அபே கடந்த மாதம் தனது இராஜினாமாவை அறிவித்தார்.

71 வயதான சுகா தற்போதைய நிர்வாகத்தில் அமைச்சரவை தலைமை செயலாளராக பணியாற்றுவதோடு அவர் அடுத்த பிரதமராவது பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அபேவின் நெருங்கிய கூட்டாளியான அவர் அரசில் தொடர்ந்து அபேவின் கொள்கையை பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைமைவாத மிதவாத ஜனநாயகக் கட்சி தலைமை பதவிக்கு நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் சுகா, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிராந்தி பிரதிநிதிகள் அளித்த 534 வாக்குகளில் 377 வாக்குகளை பெற்றார்.

இதன்போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிசிடா மற்றும் முன்னாள் கட்சி பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சிகோரு இசிபா ஆகியோருடன் போட்டியிட்டே வெற்றியீட்டினார்.

ஆளும் கட்சி தனது புதிய தலைவரை தேர்வு செய்திருக்கும் நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கு வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில் யொசிஹிடே சுகா புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவிக் காலத்தில் நடுவே பிரதமர் பதவியை ஏற்கவிருக்கும் சுகா வரும் 2021 செப்டெம்பர் மாதம் வரை அந்தப் பதவியில் நீடிக்கவுள்ளார்.


Add new comment

Or log in with...