டிக் டொக்கை மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு விற்க மறுப்பு | தினகரன்

டிக் டொக்கை மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு விற்க மறுப்பு

மைக்ரோசொப்ட் நிறுவனம், டிக்டொக் செயலியை வாங்க முன்வைத்த கோரிக்கையை பைடான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது. அதற்குப் பதில் ஒராகில் நிறுவனத்துடன் கைகோர்க்க அது திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர பூசல் டிக்டொக் செயலியை மையப்படுத்தி மேலும் தொடர்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அந்த செயலியின் உரிமை நிறுவனமான பைடான்ஸ் உடன் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

அதனால், தன் செயலியை அமெரிக்க நிறுவனங்களிடம் விற்கவேண்டிய நிர்ப்பந்தம் பைடான்ஸுக்கு ஏற்பட்டுள்ளது.

மைக்ரோசொப்ட், ஒராகில் இரண்டும் அதை வாங்க முயற்சி செய்தன.

தான் வாங்கியிருந்தால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேராமல், பயனீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயலியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்திருக்கலாம் என்று மைக்ரோசொப்ட் குறிப்பிட்டது.

ஒராகில் உடன் கூட்டுசேர்ந்துள்ள பைடான்ஸ், அமெரிக்கத் தடையை எதிர்நோக்காமலும், அதேநேரத்தில் சீன அரசாங்கத்தை அமைதிப்படுத்தவும் அந்த முடிவு உதவும் என்று பைடான்ஸ் நம்புகிறது.

இதற்கிடையில் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக டிக்டொக் வழக்குத் தொடுத்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாக ஆணை சர்வதேச நெருக்கடிநேரப் பொருளாதார அதிகாரச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அது குறிப்பிட்டது.

சீன அரசாங்கத்துக்குத் தகவல் பகிர்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அது தொடர்ந்து மறுத்து வருகிறது.

சுமார் 175 மில்லியன் முறை அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்தச் செயலி உலகம் முழுவதும் பல பில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.


Add new comment

Or log in with...