தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் நானே

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ பொதுச் செயலாளர் நான் தான் என்பதில் ஏதேனும் தெளிவின்மை இருப்பின் பிரதி தொழில் ஆணையகத்தின் தகவலறியும் சட்டத்தின் மூலம் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாத காலமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைப் பீட பதவிகள் தொடர்பான மக்கள் மத்தியில் நிலவி வரும் குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில் நேற்று பதுளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்து பேசுகையில்,

மலையக மக்களின் ஏகோபித்த தலைவனும் என்தொப்புள் கொடி உறவுகளின் பாதுகாவலன் என்ற வகையில் என் மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய தலையாய கடமைப்பாடு எனக்குள்ளது. மக்களின் புறக்கணிப்புக்கு ஆளாகி மக்களின் தேவைகளை புரிந்து சேவையாற்ற தவறிய ஒரு சில முன்னாள் அரசியல் வாதிகளின் கேளிக்கை கூத்துக்களும்,அடாவடி செயற்பாடுகளும் சமீபகாலமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர் இல்லத்தில் அரங்கேறிய வண்ணம் உள்ளன.சட்டத்திற்கு முரணான வகையில் ஓர் பழமை வாய்ந்த மாபெரும் தொழிற்சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திற்குள் அத்துமீறியது மட்டுமன்றி,அவர்களது மெய்ப்பாதுகாவலர்கள் எனும் போர்வையிலுள்ள அடியாட்கள் கும்பலின் சத்திரமாகவும் தற்போது அத் தலைமைக் காரியாலயம் மாறியுள்ளது.

எது எவ்வாறாயினும் மலையக மக்களும் அவர்களுடைய பிரதிநிதியாகிய நாங்களும் முட்டாள்கள் என எண்ணி இவ்வாறு அராஜகம் புரிவதை நிறுத்திக் கொள்வது சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறந்தது .

ஏனெனில் எம் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு,எமக்கும் கலவரத்தை உண்டுபண்ணவும்,அடியாட்களை நிறுத்தவும் தெரியும்.ஆனால் அவ்வாறான செயல்களை புரிவதற்கு நாங்கள் காடையர்கள் அல்ல.ஆகவே பெருந்தோட்ட மக்கள் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.

 


Add new comment

Or log in with...