அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது ஏன்?

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம்களிடையே ஒரு வகையான விரிசல் கடந்த பொதுத் தேர்தல் தொடக்கம் ஏற்பட்டு வருகின்றது. அது சமூக ஊடகங்களில் பலரின் பின்னூட்டல்களிலிருந்து வெளிப்படுகின்றது.

தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் சிலர் மேற்கொண்ட இன வெறுப்புப் பிரச்சாரங்களும் அதேபோன்று தேர்தலின் பின்னரான பிரதிநிதித்துவ இழப்பின் காரணமாகவும் தற்போது இனங்களிடையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

திகாமடுல்ல அல்லது அம்பாறை தேர்தல் மாவட்டம் என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 4 தொகுதிகள் காணப்படுகின்றன. அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளாகும். இந்த மாவட்டம் பல்லின மக்களைக் கொண்ட 648,057 சனத்தொகையைக் கொண்டுள்ளது. அதில் முஸ்லிம்கள் 43.58%, சிங்களவர்கள் 38.73%, தமிழர்கள் 17.39% வாழ்கின்றனர்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சனத்தொகையைக் கொண்டுள்ள தமிழ் மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமது பிரதிநிதித்துவமொன்றை இழந்துள்ளனர். இது அவர்களை வெகுவாகவே பாதித்துள்ளதாக கூறுகின்றார் மகா சக்தி கூட்டுறவு அமைப்பின் உப தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான  கே. ஆறுமுகம் அசோகா,

“அம்பாறை மாவட்டத்தில் விகிதாசார தேர்தல் முறைமையின் காரணமாக தமிழ் மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமான வாய்ப்பே கூடுதலாகவுள்ளது.

களத்திலிருந்த கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் சமூகப் பகுப்பாய்வொன்றை செய்திருப்பார்களானால் நிச்சயமாக ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்க முடியும்.

கடந்த 3 வருடங்களாக தமிழர்களின் ஒரு பிரதிநிதித்துவத்தை வாக்குகள் சிதறாமல் ஓரணியில் நின்று பெற வேண்டும் என்று நான் உட்பட புத்திஜீவிகள் முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் இறுதியில் தமிழ் கூட்டமைப்புக் கட்சி தமிழர்களுக்கு சாத்தியமற்றுப் போகின்ற போது ஏனைய கட்சிகளும் விலகி தனித்தனியாக போட்டியிடுகின்ற சூழ்நிலை உருவாகியது. இது எதிர்காலத்தில் பாராளுமன்றம் அல்லது மாகாண சபைத் தேர்தல்களிலும் கூட தாக்கம் செலுத்தலாம்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கக் கூடிய ஒரு பிரதிநிதித்துவம் இல்லை. இது யுத்தத்தால் நழிவடைந்த தமிழ் மக்களுக்கு மீளவும் உளரீதியான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தமிழ் மக்கள் கற்றுக் கொண்ட பாடமாக எடுத்து எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.” என்று கூறினார்.

இம்முறை தேர்தலில் உரிமை சார்ந்த விடயங்களோடு தமிழ் மக்கள் அபிவிருத்தி விடயங்களை எதிர்பார்த்துள்ளதாகவும் கே. ஆறுமுகம் அசோகா கூறுகின்றார்,

“பொத்துவில் தொகுதியில் மாத்திரம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை மொட்டுச் சின்னத்துக்கு அளித்திருக்கிறார்கள். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் உரிமைகளோடு இணைத்து அபிவிருத்தி அரசியலையும் நேசிக்கின்றார்கள்.

அரசியல் சீர்திருத்தம் ஒன்று வருகின்ற போது பொத்துவில் தொகுதி மட்டும்தான் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய இரட்டைத் தொகுதியாக காணப்படுகின்றது.

கல்முனை மற்றும் சம்மாந்துறைத் தொகுதிக்குட்பட்ட தமிழ் மக்களின் வாக்குகளும் அங்கு அடங்கியிருப்பதால் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் மனிதாபிமான ஜனநாயக ரீதியில் முஸ்லிம்கள் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பிருக்கின்றது.” என்றார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 07 பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கு 540 பேர் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கினர். இங்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் மகாசபை, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, ஜே.வி.பி உள்ளிட்ட 20 பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 54 வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 2019ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மொத்தம் 05 இலட்சத்து 13 ஆயிரத்து 979 வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தனர்.

பிரதேச செயலக அடிப்படையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை - Source: Ampara District Secretariat

அம்பாறை தேர்தல் தொகுதியிலிருந்து 177,144 பேரும், பொத்துவில் தொகுதியிலிருந்து 168,793 பேரும், சம்மாந்துறை தொகுதியிலிருந்து 90,405 பேரும், கல்முனை தொகுதியிலிருந்து 77,637 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 

இதேவெளை இந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு நிகழ்சி நிரலின் பிராகரம் சிதறடிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம். பாசில்,

“போருக்குப் பின்னர் அரசுடன் போட்டிபோடக்கூடிய, ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக த.தே.கூ இருந்து வந்துள்ளது. அதனைப் பலவீனப்படுத்துவதற்கான ஒரு இடமாக திகாமடுல்ல மாவட்டத்தை கண்டிருக்க முடியும். ஏனென்றால் இங்குள்ள சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ப த.தே.கூ வாக்குகளை சிதறடிக்க முடியும் என்ற அஜன்டா இருந்திருக்க முடியும். அதன் பின்னணியில் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் கருணா அம்மான் ஒரு புதிய கட்சியில் அரசின் பெரும்பான்மை சக்தியுடன் களமிறக்கப்பட்டார். இளைஞர்கள் த.தே.கூட்டமைப்பிலிருந்த நம்பிக்கையை இழந்து அம்பாறை மாவட்டத்தில் கருணாவிற்கு கீழே ஒன்றிணைய வந்தமையானது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்திருக்கிறது.” என்றார்

தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் (AITM) அம்பாறை மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அம்பாறை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்டார். விநாயகமூர்த்தி முரளிதரன் 29,379 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோன்று 25,255 வாக்குகளை இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பெற்றிருக்கிறது.

கல்முனை தமிழ் மக்களின் வாக்குகள் AITM கட்சிக்கு (10,130) அதிகமாக இம்முறை வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று பொத்துவில் தொகுதி மக்களின் வாக்குகளும் AITM (12,996) மற்றும் ITAK (15,839) கட்சிகளுக்கு கனிசமான அளவு வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் முடிவுகள் - 2020

இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகள் அகில இலங்கை தமிழர் மகா சபைக்கும் (29,379) இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் (25,255) வழங்கப்பட்டு பிரிவடைந்துள்ளது. இதன்படி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் – 04, சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் – 03 பேர் என பாராளுமன்றத்துக்கு தெரிவாகி சென்றுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 1,51,013 வாக்குகளைப் பெற்று நான்கு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 89,334 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 45,421 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.

பொதுத் தேர்தல் முடிவுகள் - 2015

இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தயாகமகே, பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரும், ஐ.ம.சு.கூ. சார்பில் விமலவீர திசாநாயக்க, சிறியாணி விஜேவிக்கிரம ஆகியோரும், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கவீந்திரன் கோடிஸ்வரனும் (சிங்களவர்கள் – 03, முஸ்லிம்கள் – 03, தமிழ் - 01) கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர்.

கடந்த 2010 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சரத் வீரசேகர, சிறியாணி விஜேவிக்ரம, பி. தயாரத்ன, ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோரும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட எச்.எம்.எம். ஹரீஸ் , பைசல் காசிம் ஆகியோரும்  இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட பி. பியசேன (சிங்களவர்கள் – 03, முஸ்லிம்கள் – 03, தமிழ் - 01) ஆகியோரும் தெரிவாகினர். தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததன் விளைவாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி 26,895 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது.

பொதுத் தேர்தல் முடிவுகள் - 2010

இந்த 2020 பொதுத் தேர்தலில் த.தே.கூ குறிப்பிட்டளவு சரிவை கண்டுள்ளது. தமிழ் மக்கள் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பை போருக்குப் பின்னர் எதிர்பார்த்ததன் விளைவாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று வெறுப்புப் பிரச்சாரங்களும் வாக்குகளைச் சிதறடிக்கக் காரணமாகியுள்ளதாக கூறுகின்றார் சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி எம்.எம். பாசில்,

“அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரசன்னமும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் கல்முனையில் அரசியல் பொருளாதாரரீதியாக பலம்வாய்ந்தவர்களாகவும் ஏனைய அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பலம் வாய்ந்தவர்களாகவும் காணப்படுவதால் தமிழ் இளைஞர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கைக் கொண்டிருக்கிறார்கள். கருணா அவர்கள் தமிழ் மக்கள் மற்றும் இளைஞர்களை மீள ஒன்றிணைப்பதாற்கான பிரச்சார யுக்தியொன்றை (வடக்கு பிரதேச செயலகம், முஸ்லிம்கள் காணிகளை சுவீகரிக்கிறார்கள்) கையாண்டதால் மிகவும் இலாபகரமான முறையில் வாக்குகளை அவர் பிரித்தெடுத்தார். இன்னும் சில ஆயிரம் வாக்குகளை பெற்றிருப்பாரானால் அவர் இங்கு பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பார்.

மூன்றாவது சக்தியொன்று இந்த மாவட்டத்தில் களமிறங்கி வாக்குகளை சிதறடித்து தானும் தோல்வியடைந்து இருந்தவரையும் தோல்வியடையச் செய்துவிட்டுச் சென்றதனால் அந்தப் பிரதிநிதித்துவம் 38,911 வாக்குகளைப் பெற்ற தேசிய காங்கிரஸ் அதன் முதன்மை வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜனநாயக ரீதியாக யாரும் தேர்தல் கேட்க முடியும். ஆனால் இங்கிருக்கின்ற மக்கள் தொகை, மாவட்டத்தின் தன்மை என்பவற்றைப் பார்க்கின்ற போது வாக்குகள் சிதறடிக்க விடாமல் ஒருவரை நோக்கியதாக அரசியல் முன்னெடுக்கப்படுகின்ற போது பிரநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.” என்றார்

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினர் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள பொறுத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் இந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையே அவர்களுக்கு சாத்தியமானது என்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம். பாசில் கூறுகின்றார்,

“சிறுபான்மையினருக்கு சாதகமான ஒரு தேர்தல் முறைமையாக தற்போது இருக்கின்ற விகிதாசார தேர்தல் முறைமை காணப்படுகின்றது. இந்த விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்திருக்கின்றது. தொகுதிவாரியான தேர்தல் முறைமையை அல்லது இரண்டும் கலந்த ஒரு முறைமையை கொண்டு வரும் முயற்சிகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் நிபுணர்களின் ஆலோசனையோடு சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதவாரான சமநிலையான ஒரு தேர்தல் முறைமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமது பிரதிநிதித்துவத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு நபரை முன்னிலைப்படுத்தி பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இதற்கு சிவில் சமூகப் பிரதிதிநிதிகள், தொழில்சார் நிபுணர்கள், புத்திஜீவிகள் மக்களை விழிப்பூட்டி வலுவூட்டுவதனூடாக இதனை சாத்தியப்படுத்த முடியும்.” என்றார்

இந்த தமிழ் பிரதிநிதித்துவ இழப்பும் முஸ்லிம் சமூகத்துக்கு மேலதிக பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றதும் தேர்தல் கால வெறுப்புப் பிரச்சாரங்களும் இனங்களிடையே ஒரு வகையான விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு நல்லிணக்க செயற்பாடுகளும் அவசியம் என்கிறார் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம். பாசில்,

கடந்த தேர்தலில் வெறுப்புப் பிரச்சாரம் மிகத் தீவிரமடைந்து காணப்பட்டது. ஆசனத்தின் இழப்பானது இன்னும் தமிழ் மக்களை ஒரு ஏக்கத்துக்குள் கொண்டு விட்டிருக்கின்றது. இதனைத் தனிப்பததற்கு பொறுப்புடமை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் ஏனைய தெரிவு செய்யப்பட்டவர்களின் அரசியல் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும்.

பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்ற தமிழ் மக்களுக்கு பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கின்ற முஸ்லிம், சிங்களப் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளில் அக்கறை செலுத்த வேண்டும். வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒத்துழைப்பு வழங்குவதனூடாக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற தப்பபிப்ராயத்தைப் போக்கமுடியும்.

அரசியல் தலைவர்கள் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருகின்ற போது மக்களுக்கிடையே திருப்தியான நிலைமையும் ஒற்றுமையும் ஏற்படும்.

கடந்த காலங்களில் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தவர்கள், அரசியல் பிரதிநிதிகள் குறிப்பாக மன்சூர், மஜீட் போன்றவர்கள் தமது அபிவிருத்தி திட்டங்களை அவ்வாறு தான் முன்னெடுத்திருக்கின்றார்கள். இவ்வாறு தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.” என்றார்

இதேவேளை இம்மாவட்டத்தில் இழக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை ஈடுசெய்யும் முகமாக வழங்கப்பட்ட த.தே. கூட்டமைப்பு தேசியப் பட்டியல் உறுப்பினரான தவராசா கலையரசன் இவ்வாறு தெரிவித்தார்,

திகாமடுல்ல மாவட்டத்தில் காணப்படும் தமிழ் வாக்காளர்களின் சதவீதத்திற்கு ஏற்ற வகையில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற முடியும்.

கடந்த இரண்டு தசாப்த காலமாக இந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வந்தது. எனினும் அது இந்த முறை இழக்கப்பட்டுள்ளது.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த தேர்தலில் முதற் தடவவையாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டமையே இதற்கான பிரதான காரணமாகும்.

அவரின் உணர்ச்சியூட்டும் வீராப்பு வசனங்களின் காரணமாக இளைஞர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் அவர் பக்கம் கவர்ந்து சுமார் 29,000க்கு மேற்பட்ட வாக்குகளை அவருக்கு வழங்கினர்.

இந்த பிரதிநிதித்துவ இழப்பினால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கவுள்ளனர். குறிப்பாக தமிழ் கிராமங்களை அழிக்கும் சிலரின் செயற்பாடுகளுக்கு இந்த பிரதிநிதித்துவ இல்லாதொழிப்பு உந்து சக்தியாக மாறியுள்ளது.

இவற்றினை கருத்திற்கொண்டே எமது கட்சி அம்பாறை மாவட்டத்திற்கான இந்த தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தினை வழங்கியுள்ளது. இதன் ஊடாக அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தினை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை நான் முன்னெடுக்கவுள்ளளேன்.

இது தொடர்பில் இளைஞர்கள் மற்றும் கல்வியியலாளர்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம். அத்துடன் அபிவிருத்தி அரசியலையே அம்பாறை மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். இது தொடர்பில் கவனம் செலுத்துவது குறித்து கட்சியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

எனவே அரசியல் ரீதியான பிரதிநிதித்துவ இழப்புக்கு பல்வேறு காரணங்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. அவை நிவர்த்திக்கப்பட்டு மீண்டும் மக்களின் பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்படுவதற்கு முயற்சிக்கப்பட வேண்டியுள்ளதுடன் அந்த இழப்பு ஏனைய பிரதிநிதிகளால் ஈடுசெய்யப்பட வேண்டும் என்பதும் இங்கு அவசியமானதாகும்.

ஏ. மொஹமட் பாயிஸ்


Add new comment

Or log in with...