மலையக மக்கள் சார்ந்த சகல விடயங்களிலும் TNA உடனிருக்கும் | தினகரன்

மலையக மக்கள் சார்ந்த சகல விடயங்களிலும் TNA உடனிருக்கும்

தலைவனை இழந்து நிற்கும் மலையக மக்களின் எந்த ஒரு பிரச்சினைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனிருக்கும். குரல் கொடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

"எங்கள் உறவுகளான மலையக மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுமானால் வடக்கு கிழக்கு மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் உங்களுக்காக குரல் கொடுப்போம். உங்களுடன் நிற்போம். உங்களோடு பயணிப்போம் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

ஜீவன் தொண்டமானிடம் பெரும் சுமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நாம் அவருக்குப் பக்கபலமாக இருப்போம்.தன் தலைவனை இழந்து விட்டோமே அவர் தொடர்ந்த பணிகள் நிறைவேற்றப்படுமா என கவலைப்படும் மலையக மக்களே ஜீவன் தொண்டமான் அதனை தொடர்வார். அவருக்கு பலமாக கை கொடுப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் அனுதாப பிரேரணையில் உரையாற்றும் போதே அடைக்கலநாதன் எம்.பி.இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

மறைந்த ஆறுமுகம் தொண்டமான் எமது நண்பர்.தேசிய இனமான மலையக மக்களின் இறைமையை பாதுகாத்து அவர்களது சுபீட்சத்திற்காக செயற்பட்ட ஒரு மாமனிதர். அவருடைய திடீர் மறைவு எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவரது பாட்டனார் வழியில் பிரச்சினைகளுக்கு சிறப்பாக முகம் கொடுத்து செயல்பட்டவர் அவர்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...