MT New Diamond கப்பல் தீ மீண்டும் கட்டுப்பாட்டில்

MT New Diamond கப்பல் தீ மீண்டும் கட்டுப்பாட்டில்-Re-ignited Fire onboard MT New Diamond Successfully Controlled

- தீ, புகை எதுவும் தென்படவில்லை
- கடற்படையின் விசேட குழு குறித்த கப்பலில் கண்காணிப்பில்
- விமானப்படையினால் 440,000 லீற்றர் நீர் தெளிப்பு
- 4,500 கி.கி. உலர் தீயணைப்பு இரசாயனம் விசிறல்

MT New Diamond கப்பலில் சீரற்ற வானிலை காரணமாக நேற்று முன்தினம் (07) மீண்டும் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இந்திய கரையோர காவல்படை அறிவித்துள்ளது.

இந்திய கரையோர காவல்படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, விமானப்படை மேற்கொண்ட ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவக் குழுவின் முயற்சியால் இன்று (09) அதிகாலை இவ்வாறு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

MT New Diamond கப்பல் தீ மீண்டும் கட்டுப்பாட்டில்-Re-ignited Fire onboard MT New Diamond Successfully Controlled

அக்கப்பலில் தற்போது எவ்விதமான தீயோ, புகையோ தென்படவில்லை என, இலங்கை விமானப்படை, கடற்படை, இந்திய கரையோர காவல்படை ஆகியன கூட்டாக அறிவித்துள்ளன.

விமானப்படைத் தளபதி வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய மேற்கொண்ட விமானப்படை அனர்த்தப் பணியில், குறித்த கப்பலின் தீயணைப்பிற்காக வான் வழியாக விமானத்தின் மூலம், 4 இலட்சத்து 40 ஆயிரம் லீற்றர் நீர் தெளிக்கப்பட்டுள்ளதோடு, 4,500 கிலோ கிராம் உலர் இரசாயன பொருள் வீசப்பட்டதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

MT New Diamond கப்பல் தீ மீண்டும் கட்டுப்பாட்டில்-Re-ignited Fire onboard MT New Diamond Successfully Controlled

கடந்த 7 நாட்களாக, இலங்கை விமானப்படையின் இலக்கம் 03 கடல் பிரிவின் பீச் கிங் (200(Beech king 200) விமானம், இலக்கம் 06 ஹெலிகொப்டர் பிரிவின் MI 17 வகை ஹெலிகொப்டர் ஒன்று, இலக்கம் 07 ஹெலிகொப்டர் பிரிவின் Bell 212 வகை ஹெலிகொப்டர் ஒன்று, இலக்கம் 08 இலகு போக்குவரத்து விமானப் பிரிவின் Y12 விமானம் ஒன்று ஆகியவற்றின் பயன்பாட்டுடன், 100 மணித்தியாலத்திற்கும் அதிக பறப்புக் காலத்தை மேற்கொண்டு, இப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக, விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு, தொடர்ந்தும் இப்பணிகளில் இலங்கை விமானப்படை ஈடுபட்டு வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கப்பலை சங்கமன்கண்டியிலிருந்து, இழுவைக் கப்பல்கள் மூலம் ஆழ்கடல் நோக்கி இழுத்துச் செல்லப்படுவதாக, கடற்படை இன்று காலை அறிவித்திருந்தது.

MT New Diamond கப்பல் தீ மீண்டும் கட்டுப்பாட்டில்-Re-ignited Fire onboard MT New Diamond Successfully Controlled

குறித்த கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் இப்பணிகள் இடம்பெற்று வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்து ஒரு கிலோமீற்றர் வரையான கடற்பரப்பில் காணப்பட்ட டீசல் கசிவை, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோனியர் விமானம் மூலம், விசேட இரசாயனத்தைப் பயன்படுத்தி சமனிலைப்படுத்தப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவ (NARA) நிறுவனத்திற்குச் சொந்தமான, கடல் ஆராய்ச்சி கப்பலொன்றும் குறித்த பகுதிக்கு வந்து மேலதிக விசாரணைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கப்பலின் அனர்த்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலில் நுழைந்து அதனை ஆய்வு செய்து நிலைமையைக் கண்காணித்து, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டலுக்கு அமைய, அனர்த்த முகாமைத்துவம் குறித்து விசேட பயிற்சியை பெற்ற, இலங்கை கடற்படையின் குழுவொன்று தற்போது (09) குறித்த பகுதிக்கு சென்றுள்ளதோடு, மூவர் தற்போது குறித்த கப்பலில் அது தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கரையோர காவற்படை ஆகியவற்றிற்குச் சொந்தமான கப்பல்கள், இழுவைக் கப்பல்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளைச் சேர்ந்த மீட்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை அனைவருடன் இணைந்து தொடர்ந்தும் இப்பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபடும் என, கடற்படை ஊடகப்ப பிரிவு அறிவித்துள்ளது.

 

 

 


Add new comment

Or log in with...