பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி

பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி-CoA-Issued Interim Order to Allow Premalal Jayasekara to Attend Parliamentary Sittings

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றையதினம் (07) குறித்த இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி தருவதற்கு  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படுகின்ற சட்டத்திற்கு அமையவும், அரசியலமைப்பின் 89ஆவது பிரிவின் (ஈ) மற்றும் 91 (1) (அ) ஆகிய உப பிரிவுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதனால், பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ, வாக்களிப்பதற்கோ உரிமை இல்லை என, சட்ட மாஅதிபர் தனது கருத்தை, கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், பாராளுமன்ற பொதுச்செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தார்.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்துள்ளதற்கு அமைய, தீர்ப்பு அறிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தாத நிலையில், தன்னை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு அவர் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, அவரை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள இடைக்கால உத்தரவை வழங்கியுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான வசதிகளை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


Add new comment

Or log in with...