பட்டதாரிகள் மேன்முறையீடு செய்ய 17ஆம் திகதி வரை அவகாசம்

அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

62,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தொழில்வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகள் தமது மேன்முறையீட்டுடன் சத்தியக்கடதாசி ஒன்றையும் இணைத்து அனுப்ப வேண்டுமென்றும் அமைச்சர்  குறிப்பிட்டார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் ​போதே அவர் இவ்வாறு குறிப்பட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

பட்டதாரி அல்லது இதற்கு முன்னர் தொழில்

ஒன்றிலிருந்து ஊழியர் சேமலாபநிதி நிதியத்தின் அங்கத்துவராக இருந்தால் மேற்படி தொழில்வாய்ப்பு கிடைக்காமல் போகுமென அதற்கான செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் விண்ணப்பதாரிகள் தமது உண்மையான நிலையை குறிப்பிட்டு மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும்.

சில பட்டதாரிகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு தொழில் இல்லாத நிலையில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை கருத்திற்கொண்டு தாம் பெற்றுக்கொண்ட பட்டத்திற்கு பொருத்தமற்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களென மேற்படி செயற்பாட்டு முறைமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தமக்கு பொருத்தமில்லாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்டுள்ள பட்டதாரிகள் இத்தகைய அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு தமது மேன்முறையீட்டை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

மேற்படி வேலைத் திட்டத்தின் கீழ் 50,000 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய மேலும் 12,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் அரச சேவையில் 38,760 பெண்கள் உட்பட 50,171 பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். கலைப் பட்டதாரிகள் 31,172 , உள்ளக பட்டதாரிகள் 29,156 மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் 20,322 பேரும் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் 1,000 பௌத்த துறவிகளும் உள்ளடங்குகின்றனர்.

அரச துறையை பலவீனப்படுத்தி தனியார் துறையை மட்டும் பலப்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருந்தன. கடந்த அரசாங்க காலத்தில் போக்குவரத்து சபையில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக ஊழியர்களை வெளியேற்றிய சம்பவத்தின் பிரதிபலனை இன்றும் அரச துறை போக்குவரத்து சேவை வீழ்ச்சி எமக்கு சுட்டிக்காட்டுகின்றது என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...