கொழும்பு பங்குச் சந்தை டிஜிட்டல் மயமாகியது | தினகரன்

கொழும்பு பங்குச் சந்தை டிஜிட்டல் மயமாகியது

பிரதமரின் அறிவுறுத்தலின் நிமித்தம்

செப்.17 முதல் செயற்பாடுகள் ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடு நிறைவடைந்தமை தொடர்பில் அறிவிக்கும் பொருட்டு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர். ஒரு புதிய பரிணாமத்தில் உலகிற்கு வெளிப்படும் மூலோபாயத்தின் கீழ் பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பங்குச் சந்தையின் அனைத்து செயற்பாடுகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளன.

கொவிட்-19 காரணமாக 52 நாட்கள் கொழும்பு பங்குச் சந்தையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட போதிலும், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பங்குச் சந்தை செயற்பாடுகள் மூலம் புதிய தோற்றத்தில் உலக தரத்திற்கு கொண்டுச் செல்லப்படுமென பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் விராஜ் தயாரத்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் ஆகியோர் பிரதமரிடம் தெரிவித்தனர். அதன்போது சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போது போன்றே எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுடன் வசதியான மற்றும் செயற்திறன் மிக்க சேவையை கொழும்பு பங்குச் சந்தை ஊடாக வழங்குவதே அவர்களது நோக்கம் என்றும் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...