இலங்கையில் முதல் தடவையாக எம்.பி. பதவிக்கு நாணயச் சுழற்சி?

இலங்கையில் முதல் தடவையாக எம்.பி. பதவிக்கு நாணயச் சுழற்சி-

- பிரேமலால் ஜயசேகர எம்.பி.யாக தகுதி இல்லை என்கிறார் சட்ட மாஅதிபர்
- உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்கிறார் சபாநாயகர்
- பாராளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்கிறார் வாசுதேவ
- பதவி இழந்தால் அடுத்த இடத்திற்கு நாணயச் சுழற்சி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய தகுதியற்றவர் என, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது ஒருங்கிணைப்பு அதிகாரியான, அரச தரப்பு சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படுகின்ற சட்டத்திற்கு அமையவும், அரசியலமைப்பின் 89ஆவது பிரிவின் (ஈ) மற்றும் 91 (1) (அ) ஆகிய உப பிரிவுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதனால், அவருக்கு பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ, வாக்களிப்பதற்கோ உரிமை இல்லை என, சட்ட மாஅதிபர் தனது கருத்தை, கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், பாராளுமன்ற பொதுச்செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாக, நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

சபாநாயகரின் கருத்து
இதேவேளை, இது குறித்து சட்ட மாஅதிபருக்கு தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, இதனை உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில், பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதோடு, அதனைத் தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களிலேயே சட்ட மாஅதிபர் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமை மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதே தனது கடமை என்றும், அதற்காக தான் முன்னிற்பேன் எனவும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதம்
பாராளுமன்ற அமர்வுகளில் பிரேமலால் ஜயசேகரவை கலந்து கொள்ள அனுமதிப்பது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பில் பதிலளித்த சபாநாயகர், பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வைப்பது எனது கடமை எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வைப்பது தொடர்பான வாய்ப்பு தொடர்பில், சிறைச்சாலைகள் ஆணைகாளர் நாயகம் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி, நீதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த கோரிக்கை தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு அன்றையதினமே (19) சட்ட மாஅதிபருக்கு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளமன்றத்திற்கும், சபாநாயகருக்குமே இது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாகவும், சட்ட மாஅதிபருக்கு இது தொடர்பில் எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்தார்.

எம்.பி. பதவிக்கு முதல் தடவை நாணயச் சுழற்சி
அதற்கமைய, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்காக, நாணயச் சுழற்சி மேற்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர பதவி இழக்கப்படுவாராயின் அல்லது தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, மரண தண்டனைக்கு எதிரான தீர்ப்பின் மேன்முறையீட்டின் தீர்ப்பில் குற்றவாளி என நிரூபிக்கப்படுமாயின், அவர் பதவி இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதால் உருவாகும் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, பாராளுமன்றத் தேர்தலில் அடுத்த இடத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் நியமிக்கப்படுவார்.

ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 08 எம்.பிக்கள் தெரிவானதோடு, அதில் 2ஆம் இடத்தில் 104,237 பிரேமலால் ஜயசேகர பெற்றிருந்தார்.

இரத்தினபுரி மாவட்டம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 08
1. பவித்ரா வன்னியாராச்சி - 200,977
2. பிரேமலால் ஜயசேகர - 104,237
3. ஜானக வக்கும்புர - 101,2250
4. காமினி வலேபொட - 85,840
5. அகில எல்லாவல - 71,179
6. வாசுதேவ நாணயக்கார - 66,991
7. முதிதா பிரஷாந்தி - 65,923
8. ஜோன் செனவிரத்ன - 58,514

அதற்கமைய அப்பட்டியலின் 9ஆம் இடத்தில் இருப்பவரே குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், குறித்த விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த அதிகூடிய வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்களும் ஒரே எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றிருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சித் பண்டார மற்றும் சன்னி ரோஹண கொடித்துவக்கு ஆகிய இருவரும் 53,261

ஒரே எண்ணிக்கையான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சன்னி ரோஹண கொடித்துவக்கு மற்றும் ரஞ்சித் பண்டார

வேட்பாளர்களான ரஞ்சித் பண்டார மற்றும் சன்னி ரோஹண கொடித்துவக்கு ஆகிய இருவரும் 53,261 எனும் ஒரே எண்ணிக்கையான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில், அவ்வாறான நிலையில், குறித்த நபரை தெரிவு செய்ய நாணயச் சுழற்சிசே மேற்கொள்ளப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதில், இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரியினால் குறித்த நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்பட்டு, வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் எனவம் அவர் சுட்டிக்காட்டினார்.

2015 கொலைச் சம்பவம்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 05.ஆம் திகதி காவத்தை நகரில்  அப்போதையை ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் கூட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர், 'தொடங்கொட சுசில் பெரேரா' என அழைக்கப்படும் ஷாந்த தொடங்கொட என்பவராவார். கே. கருணாதாஸ வீரசிங்க மற்றும் எம். இல்ஷான் என்பவர்களே இச்சம்பவத்தில் காயமடைந்த ஏனையவர்களாவர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 31ஆம் திகதி, இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி, யொஹான் ஜயசூரியவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்தீர்ப்பில், பிரேமலால் ஜயசேகர உட்பட முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, காவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷண சில்வா ஆகிய மூவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஏனைய நான்கு சந்தேகநபர்களும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரும் குறித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...