கொரோனாவினால் உலகெங்கும் இளம் பெண்களுக்கு உளப்பாதிப்பு | தினகரன்

கொரோனாவினால் உலகெங்கும் இளம் பெண்களுக்கு உளப்பாதிப்பு

உலகெங்கும் கொரோனா பாதிப்புக்குப் பின்னர் நேரம் தவறும் பழக்கத்தால் இளம் பெண்கள் மனரீதியாக பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்துள்ளதாக உலக உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மார்ச் மாதம் முதல் இளம் பெண்கள் பலருக்கும் அவரவர் தொழில் துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலருக்கு வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.பாடசாலை மாணவர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் கற்பித்தல்  நடைபெறுகின்றது.  'ஒன்லைன்' வகுப்புகள் ஒரு பக்கமும், வாழ்க்கைச் சூழல் மாறிப் போனது மறுப்பக்கமும் என வளர்இளம் பருவத்தினர் மனரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உளவியல் ஆலோசகர்கள் இதுபற்றிக் கூறுகையில் காலை எழுவது முதல், இரவு உறங்கச் செல்லும் வரை கடந்த சில மாதங்களாக, பலரின் வாழ்க்கை முறையும் மாற்றம் அடைந்துள்ளது. இந்நிலையால், வளர் இளம் பருவப் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காலையில் தாமதமாக எழுவது, இரவில் அதிக நேரம் தொலைபேசிகளை பயன்படுத்தி விட்டு,தொலைக்காட்சி பார்ப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் உடல் மற்றும் மனநிலையை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேர முறையற்ற உணவுப் பழக்கம், உறக்கம் போன்ற பிரச்சினைகளால் பின்னர் வருத்தப்படுகின்றனர். இதனால், உடல் எடை அதிகரித்து மனதளவில் பாதிக்கப்பட்டு உளவியல் ஆலோசனைக்கு தற்போது அதிகம் வருகின்றனர்.

இதனை உணராமல் இருப்பவர்களும் எதிர்வரும் காலத்தில் கூடுதலாக பாதிக்கப்படக் கூடும். கொரோனா பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டவுடன், கல்லுாரிக்கோ அல்லது தொழிலுக்கோ செல்வதற்கான இயல்பான சூழல்நிலையில் இவர்களால் கையாள முடியாது. இதனால், பெரிதளவில் மனதளவில் பாதிக்கப்படுவர். இவற்றைத் தவிர்க்க, காலை நேரத்தில் எழுவது, உணவு முறை பின்பற்றுதல், முடிந்தவரை ஏதேனும் ஒரு உடற்பயிற்சி, இரவு நல்ல உறக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்வது பாதுகாப்பானது என்று குறிப்பிட்டனர்.


Add new comment

Or log in with...