யாசகம் செய்த கோடீஸ்வரர்; திருட்டுச் சம்பவத்தில் அம்பலம்

கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, தள்ளுவண்டியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மஹரகம, பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் என தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

64 வயதுடைய குறித்த நபருக்கு சொகுசு மாடியைக் கொண்ட வீடொன்றும், அவ்வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு காரொன்று உள்ளிட்ட இரு கார்களை (WagonR) பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.  

அத்தோடு குறித்த நபர், அவரது வீட்டில் மேல் மாடியை வாடகைக்கு விட்டு மாதாந்தம் 30,000 ரூபாவை சம்பாதிக்கும் அதேவேளை, யாசகத்தின் மூலம் தினமும் 5,000 ரூபாவை சம்பாதித்து வருவதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு, கொச்சிக்கடை, ஜம்பட்டா வீதியில் 20,000 ரூபா பெறுமதியான பழங்களுடன் தள்ளுவண்டியொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார், CCTV கமெராவின் உதவியுடன் நேற்று முன்தினம் (23) குறித்த நபரைக் கைது செய்திருந்தனர்.

குறித்த வீடியோ காட்சியில், திருடப்பட்ட தள்ளுவண்டியை அவர் தள்ளிச் செல்வது கண்டறியப்பட்டதோடு, இதனைத் தொடர்ந்து அவர் குறித்த தேவாலயத்திற்கு அருகில் தினமும் யாசகம் செய்வதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த தள்ளுவண்டியை சிறிய தூரத்திற்கு தள்ளிச் சென்ற அவர், நபரொருவருக்கு 5,000 ரூபாவை கொடுத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளமை வீடியோ காட்சியில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(சு)  


Add new comment

Or log in with...