ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஏற்படுத்தும் ஆபத்தான உபாதைகள் | தினகரன்

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஏற்படுத்தும் ஆபத்தான உபாதைகள்

உணவு நஞ்சாவதால் தினமும் நாட்டில் ஏராளமானோர் பாதிப்பு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிறார்கள். இன்று நோயற்ற மனிதர்களை காண்பது அரிதாகி விட்டது. ஒரு காலத்தில் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்த மனிதர்கள் இன்று இயற்கையை வஞ்சித்து செயற்கையாய் வாழ முற்பட்டதன் விளைவை தங்களது வாழ்நாளில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை உணவுகளைத் தவிர்த்து இரசாயனப் பதார்த்தங்கள் கலந்த உணவுகளை உட்கொள்ள முற்பட்டதன் விளைவுகளை மனிதன் தனது ஆரோக்கியத்தின் சரிவில் சந்தித்துக் கொண்டிருக்கின்றான்.

திருமண வீடொன்றில் உணவு நஞ்சாகியதில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதான நிகழ்வில் உணவு உட்கொண்டவர் உயிரிழந்தார். பாடசாலையில் வழங்கப்பட்ட பால் நஞ்சானதில் மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடிக்கடி செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமேயிருக்கின்றன. உணவு நஞ்சாவதும் அதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் இங்கு சாதாரண விடயமாகிப் போய் விட்டது.

பல்வேறு நிகழ்வுகளில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதனாலும், அளவுக்கு அதிகமான இரசாயனப் பதார்த்தம் கலந்த சுவையூட்டிகள் உணவில் சேர்க்கப்படுவதனாலும் உணவு விரைவில் பழுதடைந்து நஞ்சாகின்ற நிலைக்கு வருகின்றது. திருமண வீடுகள், அன்னதான நிகழ்வுகள் மற்றும் அலுவலக நிகழ்வுகளில் பெருந்தொகையானவர்களுக்கு சமைக்கப்படும் உணவில் சமையல்காரர்கள் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது.

சில இடங்களில் இறைச்சிகளைக் கொண்டு வருகின்ற போது இரசாய உரம் வந்த உரப்பைகளில் சுற்றிக் கட்டியே அனுப்புகின்றனர். இந்த இறைச்சிகளை அரைகுறையாக வேக வைத்து கொடுப்பதனால் அதிலுள்ள நஞ்சுப் பொருட்கள் உணவில் கலந்து உணவு நஞ்சாகின்ற நிலைமை ஏற்படுகின்றது.

ஆரோக்கியத்துக்காக சாப்பிட்ட காலம் போய் அலங்காரத்துக்காக சாப்பிடுகின்ற நிலைக்கு மனிதர்கள் வந்துள்ளார்கள். சத்துள்ள உணவுகள் மறைந்து சத்தில்லாத உணவுகளின் ஆக்கிரமிப்பே இன்று தொடர்கின்றது. மனிதர்களிடம் மட்டும் இருந்த கவர்ச்சி இப்போது உணவுப் பொருட்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. விதம் விதமான உணவுப் பொருட்கள் கடைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் வாங்கி சாப்பிட்டு விட்டு நோய் நொடியிலே வீழ்ந்து சாகின்றான் மனிதன்.

எமது நாட்டில் அண்மைக் காலமாக உணவு நஞ்சாதல் மூலம் ஏற்படும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக வைத்தியசாலைகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உணவு நஞ்சாகியதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் திருமண வீடுகள், பிறந்த நாள் நிகழ்வுகள், அன்னதான நிகழ்வுகள், அலுவலக நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் அங்கு வழங்கப்படுகின்ற உணவுகளை ரசித்து, ருசித்து சாப்பிடுவதற்க்கு அச்சப்பட்டவர்களாகவுள்ளனர்.

நாட்டின் பல இடங்களிலும் உணவு நஞ்சாதலினால் பல் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற சம்பவங்கள் நாள் தோறும் இடம்பெற்று வருகின்றன. நமது நாட்டில் வருடம் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேர் வரை உணவு நஞ்சாவதனால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குள்ளாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பிடானது வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களையே குறிப்பிட்டுள்ளது. ஆனால் வைத்தியசாலைக்கு சமுகமளிக்காது வீடுகளில் தங்கியிருந்து கைவைத்தியம் மற்றும் தனியார் மருத்துவமனைகள், சித்த, ஆயுள்வேத வைத்தியசாலைகள் எனப் பலவற்றில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்பவர்கள் இதை விட பல மடங்காக இருக்க முடியும்.

இன்றைய இயந்திரத்தனமான அவசர யுகத்தில் வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் என பலர் எதைப் பற்றியும் யோசிக்காது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். தமது உடல் ஆரோக்கியத்தைக் கூட கவனிக்காதுள்ளனர். இப்பூமிப்பந்தில் மிக அற்ப காலம் மட்டும் உயிர் வாழும் மனிதர்கள் தங்களையும், தங்கள் சுற்றங்களையும் மறந்து எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பற்றி புரியவில்லை. குறைந்த பட்சம் தமது உடல் நலனில் தானும் அக்கறை செலுத்தாது எதை இவர்கள் சாதிக்கப் போகின்றார்கள்?!

உணவு நஞ்சாதல் என்பது எமது நாட்டிற்கு மட்டும் பாதிப்பல்ல. இன்று பல நாடுகளும் எதிர்நோக்கும் பெரும் பாதிப்பாக உணவு நஞ்சாதல் பிரச்சினை அமைந்துள்ளது. தற்போது உணவு நஞ்சாகுவது எமது நாட்டில் தினம் நடக்கும் சம்பவங்களாகி விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு சம்பவம் நடந்து முடிந்த பிறகு அது பற்றி விசாரணைகளை நடத்துவதும், அறிக்கைகளை சமர்ப்பிப்பதும் பெரிய விடயமல்ல. அச்சம்பவம் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

மனிதனது உடல் ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ள இதனை தடுக்க முடியாதா? இதற்கு முதலில் உணவு எவ்வாறு நஞ்சாகின்றது? அந்த உணவு நஞ்சாவதை எவ்வாறு அடையாளம் காணலாம்? அந்த உணவுகளை உட்கொள்வதை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்? என்பதைப் பற்றி பலர் அறியாது இருக்கின்றனர். இதனை அறிந்து கொண்டால் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

உணவு நஞ்சாவதற்கு பல ஏதுவான காரணிகள் உள்ளன. அதில் உணவில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்களும், உணவில் செயற்கையாக சேர்க்கப்படும் உணவுப் பதார்த்தங்களும் சுற்றுச் சூழலில் காணப்படும் பக்றீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களும் முக்கிய காரணமாக அமைகின்றன. நாம் உட்கொள்ளும் உணவின் சுவையை அதிகரிப்பதற்கும் அதன் தரத்தை உயர்ததுவதற்கும் கவர்ச்சிகரமாக உணவினை அழகுபடுத்துவதற்கும் என அதில் சேர்க்கப்படும் பலவிதமான இரசாயனப் பதார்த்தங்களும், அங்கீகரிக்கப்படாத பல இரசாயனப் பதார்த்தங்களும் உணவில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதும் உணவு நஞ்சாவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

உணவில் இயற்கையாக காணப்படும் இரசாயனப் பதார்த்தங்களும், செயற்கையாக சேர்க்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களும் ஒன்றிணைவதால் ஏற்படும் மாற்றங்கள், இரசாயனப் பதார்த்தங்களின் செறிவில் ஏற்படும் அதிகரிப்பு, உணவு உற்பத்தி செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தங்கள், உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் உணவில் சேருதல், சில உணவுப் பொருட்களை அதிக கொதிநிலையில் சமைப்பதனாலும் அவ் உணவில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்பன உணவு நஞ்சாவதற்கு முக்கியமாக அமைகின்றன.

இவை தவிர உணவு நஞ்சாவதற்கு பக்ரீரியாக்கள் அதிக பங்களிப்ப வழங்குகின்றன. அவற்றில் சல்மனெல்லா, ஸ்ரெபிலோ, கொகிச ஓவல்ரியஸ், குளோஸ்றீடியம் பெடியோலைனம், பெசிலஸ்சாரியஸ், விபிலியோ உள்ளிட்ட எட்டுவகையான பக்றீரியாக்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைவதோடு அஸ்பஜிலஸ் உள்ளிட்ட சில பங்கசுகளும் உணவு நஞ்சாவதற்கு துணைபுரிகின்றன.

இவ்வாறான காரணிகள் உணவு நஞ்சாவதற்க்கு துணை புரிகின்ற போதிலும் இவற்றை பார்த்து பிரித்து அறிவதென்பது மிக கடினமாகும். உணவு நஞ்சாதலின் வெளிப்பாடாக உடலில் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்ப்படும். அவற்றில் வயிற்றோட்டம், வாந்தி, வயிற்றுளைவு, ஹெப்படைடிஸ் ஏ, நெருப்புக் காய்ச்சல் மாத்திரமல்லாமல் புழு நோய்களும் கூட ஏற்படும். சிலரிடம் மயக்க நிலையையும் அவதானிக்கலாம். ஆனால் இந்நோய் அறிகுறிகள் குறித்து எவரும் அசமந்தப் போக்குடன் நடந் துகொள்ளக் கூடாது. உடனடியாக வைத்தியசாலை சென்று வைத்தியரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு நஞ்சாவது குறித்தும் அதனை தவிர்த்துக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். உணவுப் பொருட்கள் நஞ்சாகாதபடி அதனை களஞ்சியப்படுத்த வேண்டும். அத்துடன் உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் சமைப்பதிலும் கொண்டு செல்வதிலும் அதனை விநியோகிப்பதிலும் அதிகம் விழிப்போடு செயற்பட வேண்டும். அடிப்படை சுகாதாரத்தை பேணுவதன் மூலமும் உணவு நஞ்சாதல் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து எம்மை தவிர்த்துக் கொள்ளலாம்.

சுத்தம் சுகம் தரும் என்பார்கள். அச்சுத்தத்தை ஆரோக்கியத்தின் மந்திரமாக அனைவரும் பயன்படுத்த வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோலவே எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழலாம்.   

செ.துஜியந்தன்...?
(பாண்டிருப்பு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...