தகுதியுடைய பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில்

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியில் மாற்றமில்லை - தினேஷ்

கடந்த காலங்களில் தீர்வுகாண முடியாதவர்கள் இன்று விமர்சனம்

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு உரிய வகையில் நியமனங்கள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டுள்ளது.

பட்டதாரிகளின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத தரப்பினர் தற்பொழுது அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை விமர்சிப்பதாக வெளிவிவகார அமைச்சரான சபை முதல்வர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி ஆற்றிய உரையில் 60,000 பட்டதாரிளுக்கு நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஆவணத்தில் 50,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேறுபாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியதுடன் அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக அவசர அவசரமாக தெளிவற்ற வகையில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாகவும் கூறினார்.

நியமனங்களுக்கு தெரிவாகாத பட்டதாரிகள் அது குறித்து மேன்முறையீடு செய்ய முடியும். இதற்கான நடவடிக்கையை தற்பொழுது அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.  பட்டதாரிகள் எவருக்கும் பாதிப்பு எற்படாத வகையிலேயே தனது திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, தாம் பதவியில் இருந்த போது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தீர்வுக்கு எதுவுமே செய்ய தவறியவர்கள் இன்று அரசாங்கத்தின் திட்டங்களை விமர்சிப்பதாகவும் கூட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழங்கள் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வேலையில்லாதிருந்த அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தகுதியற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் ஆவணங்கள் தொடர்பிலும் மேல்மதிப்பீடு செய்ய உரிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் நேற்று 27/2 கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியில்,

அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளும் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்களென்பது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதியாகும். அதன் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி விளம்பர அறிவிப்புகள் மூலம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை அரசாங்கம் கோரியது. பெப்ரவரி மாத இறுதியில் பட்டதாரிகளுக்கு பயிற்சியை வழங்குவதற்காக மூன்று நாட்களுக்கு பணியில் இணைந்துக்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

கடந்த 16ஆம் திகதி அரச பொது நிர்வாக அமைச்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில் 40,092 பேர் பயிற்சிக்கு தகுதி பெறாதவர்களாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகத்தில் பட்டத்தை பெற்றிருத்தல் அல்லது ஊழியர் சேமலாப நிதியத்தில் பெயர் விபரம் காணப்படுகின்றமை மற்றும் சில ஆணவங்களில் சிக்கல்கள் உள்ளமையால் இவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் நீண்டகாலமாக யுத்தம் காணப்பட்டதுடன், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்த பட்டதாரிகளுக்கும் இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்பட்டுள்ளமையை காரணங்காட்டி 10,000 வரையான பட்டதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வித வேலைவாய்ப்பும் இல்லாது பாரிய சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

விண்ணப்பம் கோரலின் போது அரச பல்கலைக்கழங்களில் பெற்ற பட்டம் மாத்திரம்தான் செல்லுப்படியாகுமென எந்தவொரு இடத்திலும் கூறப்பட்டிருக்கவில்லை. அதேபோன்று ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்பட்டுள்ளவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்களென்றும் கூறப்பட்டிருக்கவில்லை. வேலையில்லாப் பட்டதாரிகள் இதன்மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனரா? பாதிக்கப்பட்டுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் தீர்வு என்ன? என அவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன,

தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கவும் வறுமானம் குறைந்த கல்வியறிவு குறைந்த ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலைவாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கையெடுத்தார்.

கடந்த அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளை முற்றாக மறந்துச் செயற்பட்டமையால்தான் ஜனாதிபதி இந்த பணியை முதலில் நிறைவேற்ற நடவடிக்கையெடுத்தார். 91,764 விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. அதில் 59,506 தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதற்கான கடிதங்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதுதான் தேர்தல்கள் ஆணைக்குழு அதனை தடுத்தது.

இவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்களில் 6,187 பேர் உழியர் சேமலாப நிதி செலுத்தப்பட்டவர்களாகும். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 60,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் பட்டத்தை பெற்றுள்ள அனைவரும் பயிற்சிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பிலான மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...