9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன

9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன-Mahinda Yapa Abeywardena Elected as Speaker of the 9th Parliament

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆளும்கட்சி சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன அதற்கான யோசனையை முன்வைத்ததோடு, எதிர்க்கிட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதனை வழிமொழிந்தார்.

புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன குறித்த சிறு விபரக்குறிப்பு

1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி மாத்தறை பிரதேசத்தில் பிறந்த மஹிந்த யாபா அபேவர்த்தன அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக அனுபவம் மிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்து வருகிறார். இவர் தனது ஆரம்பக் கல்வியை தெலிஜ்ஜவில மத்திய மகாவித்தியாலயம் மற்றும் மாத்தறை ராகுல வித்தியாலயம் ஆகியவற்றில் பெற்றுக்கொண்டதுடன், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சண்டிகார் முகாமைத்துவ நிறுவனத்தில் முகாமைத்துவம் தொடர்பில் விசேட கல்வியைப் பெற்றார்.

1983 ஆம் ஆண்டு ஹக்மன தேர்தல் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாகப் பாராளுமன்றத்துக்குச் சென்ற அவர், கடந்த 23 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்துவருகிறார்.  2020 பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனையை பிரதிநிதித்துவப்படுத்தி மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 80,895 முன்னுரிமை வாக்குகளுடன் இவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

1993/94 ஆண்டில் தென்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்ததுடன், 1994/2001 ஆண்டு காலப் பகுதியில் மீண்டும் அப்பதவியை வகித்திருந்தார். இவர் சுகாதாரம், கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரியம், நீர்ப்பாசனம் மற்றும் ஊரக வளர்ச்சி, தொழில் மற்றும் வர்த்தகம், பாராளுமன்ற விவகாரம் மற்றும் விவாசயம் போன்ற பல்வேறு துறைகளில் அவர் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டில் கோப் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்தார். மஹிந்த யாபா அபேவர்த்தன அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு சீனாவின்  பீஜிங் நகரில் நடைபெற்ற அமைதிக்கான ஆசிய பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற  50 வது C.P.A மாநாட்டிலும், 2005ஆம் ஆண்டு பீஜிங் நகரில்  நடைபெற்ற சர்வதேச பாராளுமன்ற மாநாட்டிலும் கலந்துகொண்டிருந்தார்.


Add new comment

Or log in with...