அனைத்து பல்கலைக்கழகங்களும் ஓகஸ்ட் 17 முதல் ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழகங்களும்ஓகஸ்ட் 17 முதல் ஆரம்பம்-All Universities Will Resume Academic Activities From Aug 17-UGC-Chairman-Professor-Sampath-Amaratunge
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சம்பத் அமரதுங்க

- பல்கலை விடுதியில் வழமைபோன்று தங்க அனுமதி
- ஒரே பீட, ஒரே வருட மாணவர்கள் ஒன்றாக தங்குமாறு அறிவுறுத்தல்

அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (14)  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி வைத்திய பீடங்களின் இறுதி வருட மாணவர்களின்  பரீட்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து படிப்படியாக, இதுவரை அனைத்து இறுதி வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் பரீட்சைகளை மிகவும் வெற்றிகரமாக நடாத்திச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இணையத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்த அவர், மாணவர்களுக்கு எவ்வாறான தடைகள் காணப்பட்ட போதிலும் இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் இதுவரை மாணவர்களுக்கான விடுதியில் ஒரு அறையில் ஒருவர் மாத்திரம் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், பரீட்சைகள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயினும் தற்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எந்தவொரு தடையுமின்றி மாணவர்கள் வழமைபோன்று விடுதியில் தங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த விடுதியின் அறையில் தங்கும் மாணவர்கள் குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட வருடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவாக இருக்கவேண்டுமெனவும், மற்றைய ஆண்டு மாணவர்களை கலப்பாக இருக்க அனுமதிக்க வேண்டாமென பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் விடுதிகளுக்கு விருந்தினர்கள் வந்து பார்வையிடுவதை உச்ச அளவில் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவ்வாறு வருபவர்களின் பெயர் விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...