இரு டிப்பர்களுடன் பால் ஏற்றிவந்த பவுசர் மோதி விபத்து | தினகரன்


இரு டிப்பர்களுடன் பால் ஏற்றிவந்த பவுசர் மோதி விபத்து

ஹட்டனிலிருந்து பெலவத்த வரை பால் ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் வாகனம், பிரதான வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்களுடன் மோதி விபத்திற்குள்ளானதாக, நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (14) அதிகாலை ஒரு மணியளவில்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில்   இவ்விபத்து சம்பவித்துள்ளது.  

தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகிய ரிப்பர் வாகனமும் குறித்த டிப்பரை சீர்செய்வதற்காக சென்ற மற்றுமொரு டிப்பர் வாகனமும், ரதல்ல குறுக்கு வீதியில் கார்பேக் பிரதேச வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில், அவ்வழியாக பயணித்த பால் ஏற்றிக்கொண்டு வந்த பௌசர் வாகனம், குறித்த இரண்டு டிப்பர் வாகனங்களுடனும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் எவரும் காயமடையவில்லை என்பதோடு, பால் ஏற்றிக்கொண்டு வந்த பௌசர் வாகனத்திற்கும் இரு டிப்பர் வாகனங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளன.  

பௌசர் வாகனச் சாரதி உறக்க களைப்பில் இருந்தமையால் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதே இடத்தில் நேற்று (13) மொணராகலையிலிருந்து வட்டவளை மாட்டு பண்ணைக்கு புற்களை ஏற்றி சென்ற பாரவூர்தியொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது. இவ்விபத்தில் அதன் சாரதி காயங்களுக்குள்ளாகிய நிலையில்,நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...