உலகில் முதல் நாடாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா ஒப்புதல் | தினகரன்


உலகில் முதல் நாடாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா ஒப்புதல்

ரஷ்யாவின் கமலேயா நிறுவனத்தினால் மேம்படுத்தப்பட்ட உலகின் முதலாவது கொவிட்–19 தடுப்பு மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்திருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்தார். 

இந்த தடுப்பு மருந்து இரண்டு மாதத்திற்கும் குறைவான காலமே மனிதர்களிடம் சோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பிலான இறுதிக் கட்ட மருத்துவ சோதனை தொடரும் நிலையிலேயே இது ஒரு தடுப்பூசியாக பயன்படுத்துவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. “உலகில் முதல்முறையாக புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து ரஷ்யாவில் இன்று காலை பதிவு செய்யப்பட்டது” என்று அமைச்சர்களுடனான வீடியோ கொன்பிரன்ஸ் வழியான சந்திப்பின்போது புட்டின் தெரிவித்தார்.  

பாரிய அளவில் இந்த தடுப்பு மருந்தை தமது நாடு உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.  

எனினும் ரஷ்யா மேம்படுத்தி இருக்கும் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து உலகளலில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றை தடுப்பதற்காக உலகெங்கும் 100க்கும் அதிகமான சாத்தியம் கொண்ட தடுப்பு மருந்துகள் மேம்படுத்தப்பட்டபோதும் அதில் குறைந்தது நான்கு மாத்திரமே இறுதிக் கட்டமாக மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.  

அவ்வாறான தடுப்பு மருந்து ஒன்று அடுத்து ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...