பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: லெபனான் அரசு இராஜினாமா | தினகரன்


பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: லெபனான் அரசு இராஜினாமா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் அதிகரித்து வரும் எதிர்ப்பை அடுத்து லெபனான் அரசு இராஜினாமா செய்துள்ளது.  

பிரதமர் ஹசன் டியாப் கடந்த திங்கட்கிழமை மாலை தேசிய தொலைக்காட்சி ஒன்றில் இதனை அறிவித்தார்.  

நாட்டுத் தலைவர்களில் அலட்சியப் போக்கு மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களிடையே பரவலான குற்றச்சாட்டு உள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாரிடையே கடந்த திங்கட்கிழமை மோதல் வெடித்தது.  

பெய்ரூட் துறைமுகத்தில் பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படும் வரை காபந்து அரசொன்றாக செயற்படும்படி தற்போதைய அரசை ஜனாதிபதி மைக்கல் அவுன் கேட்டுக்கொண்டுள்ளார்.  

பல மாதங்கள் இடம்பெற்ற இழுபறிக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட டியாப், “நாட்டை காப்பதற்கான திட்டத்திற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டி இருப்பதாக” தெரிவித்துள்ளார்.  

வெடிப்புச் சம்பவம் பெருமளவிலான ஊழலின் விளைவால் ஏற்பட்டதாய் கூறிய பிரதமர், குற்றவாளிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். 

தேர்தலை முன் கூட்டியே நடத்தக் கேட்டுக்கொள்ளப்போவதாகப் பிரதமர் டியாப் கூறினார்.   


Add new comment

Or log in with...