மடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை | தினகரன்


மடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை

விழா ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் தீர்மானம்

மடு திருத்தலத்திற்கு ஓகஸ்ட் மாத திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்கள் தற்காலிக விடுதிகள் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பேணப்பட்டு வரும் நிலையில் பக்தர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்று முன்தினம் காலை 11மணிக்கு மடு திருத்தலத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவைக் கொண்டாடுவதற்கு ஆயத்தம் செய்யும் வண்ணம் அவசர கூட்டத்தை ஏற்பாட செய்தோம். குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டன.

முக்கியமாக நாங்கள் இன்னும் 'கொரோனா வைரஸ்' தொற்றின் அச்சுறுத்தலுடன் வாழ்வதனால் அதற்கு ஏற்றவாறு சுகாதார பாதுகாப்புடன் அந்த கட்டுப்பாடுகளுடன் தான் இந்த விழாவை கொண்டாட வேண்டியிருக்கின்றது.

எனவே தான் இந்த முறை எங்களுக்கு தங்கும் வசதிகள் ஒரு அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருக்கும் வீடுகளில் தங்கலாம் என்று கூறினாலும் அந்த வீடுகள் எல்லாம் ஏற்கனவே மக்களினால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆகையினால் யாரும் வந்து வீடுகளில் தங்கக் கூடிய வசதிகள் இல்லை. அதைவிட எத்தனையோ பேர் வழமையாக ஆயிரம் ஆயிரமாக  வந்து கூடாரங்களில் தங்குவார்கள். ஆனால் இம்முறை இந்த கூடாரங்களும் அமைக்க வேண்டாம் என்று எமக்கு தடை செய்திருக்கிறார்கள்.

ஆகையினால் இந்த திருவிழாவிற்கு வந்து கூடாரங்களில் தங்கலாம் என்பது முற்றாக தடை செய்யப்பட்டள்ளது என்பதனை  தயவுடன் தெரிவித்தக் கொள்ளுகின்றோம். மடு திருத்தலத்திற்கு வருகின்ற போது உங்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் பல விடயங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

அதாவது நீங்கள் தனியாக வாகனங்களில் வரும்போது வாகனங்களில் வருகின்றவர்களின்   பெயர்கள், அவர்களின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து பட்டியலிட்டு கொண்டு வர வேண்டும். மேலும் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வாருங்கள்.

மேலும் இந்த மடு திருத்தலத்தை சுற்றி வருவதற்கு  8நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் அந்த நுழைவாசல் ஊடாக ஆலயத்திற்கு வருகின்றவர்கள் சிறிய பயணப்பொதிகளுடன் மட்டுமே வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்குவார்கள்.

எனவே தயவு செய்து பொது போக்குவரத்து சேவையூடாக வருபவர்கள் தயவு செய்து சிறு பொதிகளுடன் வாருங்கள்.

தனியார் வாகனங்களில் வருபவர்கள் அவர்களுடைய வாகனங்களிலேயே அந்த பொருட்களையும், பயணப்பொதிகளையும் வைத்து விட்டு புனித பூமியை சுற்றி இருக்கும் இந்த வழிபாட்டு தலத்திற்கு வரலாம்.

எதிர்வரும் ஆவணி மாதம் 14ஆம் திகதி  மாலை பேஸ்பர்  வழிபாட்டுடன் திருப் பவணியும் நடத்த  ஆலோசித்து இருக்கின்றோம்.

அத்தோடு திருவிழா அன்று ஓகஸ்ட் 15ஆம் திகதி கண்டி மறைமாவட்ட ஆயர்  தலைமையில் திருவிழா திருப்பலி காலை 6.15மணிக்கு கூட்டுத்திருப்பலியாக  நடைபெறும். அதன் பிறகு வழமையான திருச்சொரூப பவணியும் நடைபெறும்.

அதன்பிறகு திருப்பயணிகளுக்காக மேலும் மூன்று திருப்பலிகள் அந்த நாளிலேயே ஒப்புக் கொடுக்கப்படும். எனவே பக்தர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மடு திருத்தலத்திற்கு வருகை தந்து மடு அன்னையின் ஆசீரை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

மன்னார் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...