ஐ.தே.க.வின் புதிய தலைவர் யார் என்பது இன்று தெரியும்

அதன் பின்னரே தேசியப்பட்டியல் எம்பி தெரிவு

 

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பின்னரே தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பில் பெயர் வெளியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கூடி ஐ.தே.க தலைவர் யார் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வர். அதனையடுத்து கட்சியின் செயற்குழு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடி அந்த தீர்மானத்தை அங்கீகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ள நிலையில் தலைவர் பதவிக்காக நான்கு பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தயா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரே இவ்வாறு புதிய தலைவருக்கான தெரிவு பட்டியலில் அங்கம் வகிக்கின்றனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...