இலங்கை மகளிர் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக லங்கா டி சில்வா | தினகரன்


இலங்கை மகளிர் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக லங்கா டி சில்வா

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் லங்கா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் கிரிக்கெட் அணிக்கான நீண்ட ஒப்பந்தம் கொண்ட தலைமை பயிற்றுவிப்பாளர் ஒருவரை இலங்கை கிரிக்கெட் நியமிக்கும் வரையில், இவ்வருட இறுதிவரை லங்கா டி சில்வா தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா டி சில்வா இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விடயத்தினை, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

லங்கா டி சில்வா இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பில் நீண்ட காலமாக பயிற்றுவிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். இறுதியாக இவர், இலங்கை 19 வயதுக்கு உட்பட்டோர் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டு நிறைவுவரை எந்தவொரு கிரிக்கெட் தொடர்களும் அட்டவணைப்படுத்தப்படவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் 2021 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த போதும், கொவிட்-19 காரணமாக அடுத்த வருடத்துக்கு குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்கு குறித்த தொடர் பிற்போடப்பட்டுள்ள போதும், போட்டியை நடத்தும் அந்தஸ்தை இலங்கை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. அதேநேரம், மகளிருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2022ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் தகுதிகாண் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கிண்ணத்துக்கான இறுதி மூன்று இடங்களுக்கான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் தொடரே இவ்வாறு நடைபெறவுள்ளது.

இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹர்ஷ டி சில்வா செயற்பட்டுவந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு இலங்கை அணி விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. இதில், கடந்த வருடம் நடைபெற்ற ரி 20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றிந்தது.

இவ்வாறான நிலையில் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள லங்கா டி சில்வா அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். முன்னணி வீராங்கனைகளான சஷிகலா சிறிவர்தன மற்றும் ஸ்ரீபாலி வீரகொடி ஆகியோர் கடந்த மாதங்களில் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர்களின் இடத்தை நிரப்புவதற்கான வீராங்கனைகளையும் தயார்செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...