தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்படுவதற்கு அனுமதியோம்!

'தமிழ் மக்களின் உணர்வுகளுக்கேற்ப தமிழ்க் கூட்டமைப்பு மாற்றம் பெற வேண்டும்' என்று கூறுகிறார் த.தே.கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோ.கருணாகரம் (ஜனா).

"நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்களின் ஆணை மாறுபட்டிருக்கிறது. அதாவது தமிழ் மக்கள் இன்று வித்தியாசமான விதத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உணர்வலைகளுக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும்.அது காலத்தின் கட்டாயம். மாறா விட்டால் காலவோட்டத்தில் கூட்டமைப்பு தூக்கி வீசப்படும் துர்ப்பாக்கிய நிலை தோன்றலாம்" என்றும் கூறுகிறார் ஜனா.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கோவிந்தன் கருணாகரம்(ஜனா) ரெலோ கட்சியின் பொருளாளர் ஆவார்.

ரெலோ என அழைக்கப்படும் தமிழீழ விடுதலைக் கழகத்தின் நீண்ட கால போராளியாக இருந்தவர் இவர். கருணாகரம் இரண்டாவது தடவையாக பாராளுமன்றிற்குத் தெரிவாகியுள்ளார்.

இந்தத் தேர்தலில் 26,382 வாக்குகளைப் பெற்ற அவர் ஏற்கனவே கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார்.

மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்ற அவர், மக்களுக்காக இலவச பிரேத ஊர்தி சேவையை நடத்தி வருகிறார்.

அவர் இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் செல்லவிருக்கின்ற நிலையில் தினகரனுக்குப் பேட்டி அளித்தார்.

கேள்வி: தாங்கள் சார்ந்த த.தே.கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதே! உங்கள் பேச்சாளர் சுமந்திரனும் பகிரங்கமாக அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அது தொடர்பாக என்ன கூற விளைகிறீர்கள்?

பதில்: அது உண்மை. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். மக்கள் ஒரு வித்தியாசமான பாதையை விரும்புகிறார்கள். உரிமையுடன் அபிவிருத்தியை கூடுதலாக நேசிக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாமும் கூட்டமைப்பும் அலசிஆராய்ந்து பாதையை மாற்ற முற்படுவோம்.எதுஎப்படியிருப்பினும் இன்று த.தே.கூட்டமைப்பு தனது பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது.

கேள்வி: இதற்காக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ரெலோவின் பொருளாளர் என்ற வகையிலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் உங்களது ஆலோசனை என்ன?

பதில்: மிக விரைவில் எமது கட்சியின் அரசியல் குழு கூடி அரசியல் தொடர்பிலும் கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பிலும் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானமெடுத்து அது த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: த.தே.கூட்டமைப்பு சமகாலத்தில் பாரிய வாக்குச் சரிவை சந்தித்துள்ளது. அது தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: உண்மை.மட்டக்களப்பில் மாத்திரம் 50ஆயிரம் வாக்குகள் இழக்கப்பட்டிருக்கின்றன. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் சுமார் 20ஆயிரம் வாக்குகள் சரிந்துள்ளன. மக்கள் உரிமையை மாத்திரமல்ல அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள் என்பது அதன் வெளிப்பாடு.எனது கணிப்பும் அதே. அதற்கமைய கூட்டமைப்பு சுயவிமர்சனம் செய்யப்பட்டு தனது பாதையை மாற்ற வேண்டும்.

கேள்வி: இம்முறை த.தே.கூட்டமைப்பு ஆக 10ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதேவேளை தங்கள் ரெலோ கட்சி வன்னியில் 2ஆசனங்களையும் மட்டக்களப்பில் தாங்களுமாக மூவர் தெரிவாகியிருக்கிறீர்கள். இந்தநிலையில் என்ன கூற விளைகிறீர்கள்?

பதில்: ரெலோவைப் பொறுத்தவரை கடந்த தடவை இருவர் தெரிவாகியிருந்தனர்.ஆனால் இம்முறை மூவர் தெரிவாகியுள்ளோம். இது எமக்கு கிடைத்த மக்கள் அங்கீகாரம்.

கேள்வி: அப்படியானால் மாவட்ட ரீதியில் கூட்டமைப்பிற்கு 9ஆசனங்கள் கிடைத்தன. அதில் 3ஆசனங்கள் தங்கள் பங்காளிக்கட்சிக்குரியவை. எனவே இனிமேல் கூட்டமைப்பில் உங்களது வகிபாகம் வலுவானதாக இருக்குமா? அல்லது தொடர்ந்து வழமை போல தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்திற்கு துணை போவீர்களா?

பதில்: நல்ல கேள்வி. நாம் மூன்றிலொரு பங்கு அதிகாரத்திலுள்ளோம். எனவே எமக்கான பங்கு அதிகாரம், அதற்கப்பால் கூட்டமைப்பின் தீர்மானம் ஏனைய செயற்பாடுகளில் நாம் கணிசமான பங்கை வகிப்போம். முன்னர் இருந்தது போல தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட அனுமதியோம்.

கேள்வி: மட்டு.மாவட்டத்தில் தங்களுக்கு கட்சிக்குள்ளே குத்துவெட்டுக்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றதே..

பதில்: உண்மை. வெளியில் அந்த சூழ்ச்சி இடம்பெறவில்லை. எதிரி என்றால் தைரியமாக எதிர்கொள்ளலாம்.இது துரோகிகள். கட்சிக்குள்ளேயே பலத்த குத்துவெட்டுகள் இடம்பெற்றன.பலத்த போராட்டத்தின்மத்தியில் வெற்றிபெற்றேன். சூழ்ச்சிகள், குத்துவெட்டுக்கள் அவற்றையும் தாண்டி என்னை மக்கள் தெரிவு செய்துள்ளமை என்பாலுள்ள நம்பிக்கை காரணமாக ஆகும்.

கேள்வி: வாக்களித்த மக்களுக்கு என்ன சேவை செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதோடு நின்று விடாமல் அவர்களுக்கான சேவையை நேரகாலம் பாராமல் செய்வேன்.குறிப்பாக மக்களுக்கான உட்கட்டமைப்பு, உள்ளூர் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி தொழில் வாய்ப்பில்லாத முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவ யுவதிகள் உட்பட ஏனையோருக்கும் தொழில்வாய்ப்புகளை, வாழ்வாதாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளேன்.

கேள்வி: கடந்த காலங்களில் கூட்டமைப்பு மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை, தன்னிச்சையாக தீர்மானங்களை நிறைவேற்றுவதெனவும் தங்கள் கட்சியைக் கூட மதிப்பதில்லை எனவும் ஊடகங்களில் பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வந்திருக்கின்றது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இதற்கான பதிலை இம்முறை மக்கள் தேர்தலில் சொல்லியிருக்கிறார்கள். கட்சிக்காக மக்களல்ல, மக்களுக்காகவே கட்சி என்ற நிலை வர வேண்டும் என்பதே அனைவரதும் அவா. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

கேள்வி: இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்கக் காரணம் யார்? என்று கருதுகிறீர்கள்.

பதில்: யார் காரணம் என்பதை விட தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்தித்து வாக்களித்திருக்க வேண்டும். அம்பாறையில் ஒரு தமிழ் எம்.பிதான் வரலாமென்பதை அனைவரும் அறிவார்கள். எனவே மக்கள் ஏதாவது ஒரு தரப்பிற்கு ஒருமித்து வாக்களித்திருக்க வேண்டும்.கூட்டமைப்பில் வெறுப்பு என்றால் அடுத்த கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்க வேண்டும். அதை விடுத்து வாக்குகளை சிதறடித்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். கவலைதான். 1994இல் நடந்தது போன்று நடந்துள்ளது. அதற்காக மக்களை மாத்திரம் குற்றம் சுமத்த விரும்பவில்லை.கட்சி மீது கொண்ட அதிருப்தி, கடந்த கால உறுப்பினரின் செயற்பாடுகளும் காரணமாகலாம்.

கேள்வி: தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக என்ன சொல்ல விளைகிறீர்கள்?

பதில்: வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டமென்றால் அது அம்பாறை மாவட்டம்தான். எனவே நானும் எமது தலைவர் செல்வமும் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பிரதிநிதியை அம்பாறை மாவட்டத்திற்கு கட்டாயம் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினோம். நாம் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களும் இதே நிலைப்பாட்டில் இருந்தனர். கடந்கால பிரதிநிதிகள் விட்ட தவறுகளும் அவர்கள் நடந்து கொண்ட முறையுமே இம்முறை அந்த மக்கள் கருணாவுக்கும் ஏனையோருக்கும் வாக்களிக்கக் காரணம் .

கேள்வி: அம்பாறை மாவட்ட தமிழ் மக்களையிட்டு மிகுந்த உணர்வுடனிருப்பவர் நீங்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் : அம்பாறை வாழ் தமிழ் மக்கள் பல வழிகளிலும் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள். ஆயுதரீதியாகவும், இனரீதியாகவும் பலத்த பாதிப்பை எதிர்கொண்டவர்கள். பல தமிழ்க்கிராமங்கள் பறிபோயுள்ளன. அவர்கள் மனங்களில் நான் குடியிருப்பவன். அவர்களும் அப்படியே. அவர்களுக்கு உரிய சேவைகள் செய்யப்படவில்லை. எனவே எனது சேவையின் ஒரு பகுதியை அவர்களுக்கு கட்டாயம் செய்வேன்.

கேள்வி: த.தே.கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியாக இருக்கிறீர்கள். கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் இல்லை என்றும் சொல்கிறீர்கள். அப்படியெனின் அதை விட்டு வெளியேற ஏன் விரும்பவில்லை?

பதில்: வெளியேறினால் ஜனநாயகம் வந்து விடுமா? உள்ளிருந்து உரிமை, அதிகாரத்துடன் கலந்துரையாடி, போராடி அதனை நிலைநாட்ட வேண்டும். அதனூடாக மக்களுக்கான சேவை செய்ய வேண்டும்.

கேள்வி: த.தே.கூட்டமைப்பை ஏன் இன்னும் பதியாமல் மற்றுமொரு கட்சியின் பெயரில் இயங்குகிறீர்கள்? அக்கட்சியில் தேர்தல் கேட்கிறீர்கள்? பதியப்படாமையில் தங்களும் உடன்பாடா?

பதில்: ஒருபோதும் உடன்பாடில்லை. கட்சி கட்டாயமாக பதியப்பட வேண்டும். அதற்கு முறையான நிருவாகம், கட்டமைப்பு உருவாக்கப்பட்டு முறைப்படி தேசியமட்டம், மாவட்ட மட்டம், தொகுதி மட்டம், பிரதேச மட்டம், கிராமிய மட்டம் என இயங்க வேண்டும். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...