இலங்கை பிரதமருக்கு இந்திய பிரதமர் அழைப்பு

குஷிநகர் விமான நிலையத்தில் முதல் விமானத்தை தரையிறக்க இலங்கைக்கு அழைப்பு

புதிதாக மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் குஷிநகர் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானத்தை தரையிறக்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இந்த அழைப்பை விடுத்திருப்பதாக இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

குஷிநகர், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ளது. இதன் தலைநகர் பதரௌனா நகரிலுள்ளது. கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் குஷிநகரிலேயே பரிநிர்வாணம் அடைந்தார். இதன் காரணமாக இந்த மாவட்டத்திற்கும் இதே பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றமை தொடர்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் (08) பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தபோதே இந்திய உயர் ஸ்தானிகர் இந்த அழைப்பை விடுத்தார்.

பிரதமர் மோடி, பௌத்த மதத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும், சுற்றுலாத் துறை மட்டுமல்லாமல் தொல்பொருள் போன்ற பிற துறைகளுடன் தொடர்புடைய திட்டங்களைத் தொடங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே இதன்போது கூறினார்.

இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள எயர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது தனது இரங்கலையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுக்கு மேலதிகமாக, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக உயர் ஸ்தானிகர் பாக்லே தெரிவித்தார்.

இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...